887. கெடுக்கும் வண்ணமே பலர்உனக் குறுதி
கிளத்து வார்அவர் கெடுமொழி கேளேல்
அடுக்கும் வண்ணமே சொல்கிறேன் எனைநீ
அம்மை இம்மையும் அகன்றிடா மையினால்
தடுக்கும் வண்ணமே செய்திடேல் ஒற்றித்
தலத்தி னுக்கின்றென் றன்னுடன் வருதி
மடுக்கும் வண்ணமே வேண்டிய எல்லாம்
வாங்கி ஈகுவன் வாழ்திஎன் நெஞ்சே.
உரை: என்னுடைய நெஞ்சமே, உன்னைக் கெடுக்கும் கருத்தால் பலர் உறுதியாவன போலக் கெடுமொழி கூறுவர்; அதனைச் செவியிற் கொள்ளற்க; அம்மையிலும் இம்மையிலும் என்னை நீ விடாது தொடர்கிறபடியால், உனக்கு அடுத்தனவாகிய நல்லனவே உரைககின்றேன்; தடுத்துக் கை யொழியாமே திருவொற்றியூர்க்கு - இன்று என்னுடன் வருக; உன்பால் செறியுமாறு நீ வேண்டிய யாவற்றையும் சிவன்பால் வாங்கித் தருவேன்; வாழ்ந்து போவாயாக. எ.று.
ஈண்டுப் பலர் என்றது, கண் காது மூக்கு பொறியிடத்து வாழும் புலன்களாகிய தீயவர். உலகியற் பொருட்களையும் அவற்றாற் பெறலாகும் நுகர்ச்சிகளையும் காட்டி நெஞ்சு தடுமாறச் செய்தலின், அதனைக் “கெடுக்கும் வண்ணமே பலர் உனக்குறுதி கிளத்துவர்” என்றும், புலன்கள் காட்டும் ஆசையும் நுகர்ச்சியும் பிறவிப்பிணியாதலால் அவற்றைக் “கெடுமொழி கேளேல்” என்றும் உருவக வாய்பாட்டால் எடுத்துரைக்கின்றார். முற்பிறப்பையும் இப்பிறப்பையும் நினைந்து பேசுவதால், “அம்மையிம்மையும் அகன்றிடாமையினால்” என அறிவிக்கின்றார். அறிவதாராய்ந்து கண்டவற்றை முற்பட மறுத்தல் இயல்பாதலின், “தடுக்கும் வண்ணம் செய்திடேல்” என்று தெளிவிக்கின்றார். ஒற்றித் தியாகப்பெருமானை வழிபடல் நற்பேற்றுக்கு வாயிலாதலின், “ஒற்றித் தலத்தினுக்கு இன்று என்றன்னுடன் வருதி” என அழைக்கின்றார். தியாகப்பெருமான் வழங்குவனவற்றையும் வழங்கும் திறத்தையும் விளம்புதற்கு, “மடுக்கும் வண்ணமே வேண்டிய வெல்லாம் வாங்கி” என்றும், நெஞ்சிற்குக் கொடுக்கும் திறத்தை “ஈகுவன் வாழ்தி என் நெஞ்சே” என்றும் இயம்புகின்றார்.
இதனால், யாவர் யாது சொல்லினும் கேளாது ஒற்றிப் பரமனையடைந்து பணிந்து வேண்டுவ பெற்று வாழ்க என்றவாறாம். (10)
|