889. கரிய மாலன்று கரியமா வாகிக்
கலங்க நின்றபொன் கழல்புனை பதத்தார்
பெரிய அண்டங்கள் யாவையும் படைத்தும்
பித்தர் என்னும்அப் பேர்தனை அகலார்
உரிய சீர்கொளும் ஒற்றியூர் அமர்ந்தார்
உம்பர் நாயகர் தம்புயம் புனைய
வரிய கன்றநன் மலர்கொடு தெரிந்து
மாலை சூட்டுதும் வருதிஎன் மனனே.
உரை: கரிய நிறமுடைய திருமால் அந்நாளில் கரிய பன்றியாய் மாறிச்சென்று திருவடி காணாமல் மதிகலங்கி மயங்கிநின்ற பொற்கழல் அணிந்த திருவடியுடையவரும், பெரியவாகிய அண்டங்கள் அனைத்தையும் படைத்தளித்தும் பித்தர் என்ற பெயர் நீங்காதவரும், தனக்குரிய புகழ் பெறுதல் தவறாத திருவொற்றியூரிலமர்ந்தவரும், தேவர்கட்கு நாயகருமாகிய சிவனுடைய தோளில் புனைதற்கு வண்டு மொய்க்காத நல்ல புதுமலர் தெரிந்து கொணர்ந்து மாலை தொடுத்தணிவோம், என் மனமே, வருக. எ.று.
திருமால் கருமுகிலின் நிறமமைந்த மேனியுடையராதலின், “கரியமால்” என்றும், சிவனது திருவடி காண்டற்பொருட்டுக் கரிய பன்றி யுருக்கொண்டு சென்றமையின், “கரியமாவாகி” என்றும், சென்றும் திருவடி காணமாட்டாமையால் அறிவு கலங்கி வருந்திய வரலாற்றைக் “கலங்க நின்ற பொன் கழல்புனை பதத்தார்” என்றும் கூறுகின்றார். பொன்கழல் - பொன்னாலாகிய வீரகண்டை, சங்க காலத் தமிழ் வேந்தர் பகை வேந்தர் முடிப்பொன் கொண்டு இக் கழல்களைச் செய்து அணிந்து கொண்டனரெனச் சங்கவிலக்கியங்கள் குறிக்கின்றன. பதம் - பாதம். பெரியவாய் எண்ணிறந்துள்ள பேரண்டங்கள் அனைத்தையும் படைத்தளித் தருளுவதுபற்றிப் பெரிதும் புகழத்தக்க பெருமானாயினும், தன்னை நினைப்பவர் நெஞ்சில் ஞான வின்பம் நல்கித் தன்னை நினைந்து தனக்குரிய திருத்தொண்டையே காதலித்துச் செய்யும் பித்துடையராக்குதல் பற்றிச் சிவனைப் பித்தரென வழங்கிவரும் நயம் கருதிப் “பித்தர் என்னும் அப்பேர்தனை யகலார்” என்று புகழ்கின்றார். பெரிய அண்டங்களைப் படைத்தளிக்கும் பெருமானுக்குப் பித்தரென்ற பெயர் பொருந்தாது என நிற்றலின், படைத்தும் என்றவிடத்து உம்மை எதிர்மறை. ஊர்கட்குரிய மருதவளப் புகழ் முற்றும் நன்கமையப்பெறுதலின், “உரிய சீர் கொளும் ஒற்றியூர்” என உரைக்கின்றார். தேவர்கட்கும் அவர்கட்கு மேலாய தேவர்கள் அனைவர்க்கும் தலைவரென்பது விளங்க, “உம்பர் நாயகர்” என்கின்றார். வரி - மலரிடத்துத் தேனுண்ணும் வண்டு. வண்டு மொய்த்தற்கு முன்பே கொய்து கொண்ட புது மலர் என்பார், “வரியகன்ற நன்மலர்” என்றும், அப் பூக்கள் ஆய்ந்தாய்ந்து கொள்ளப்படுதல் புலப்பட, “தெரிந்து” என்றும் உரைக்கின்றார். மாலை தொடுக்கும் போதும் சிவன் தோளில் அணியும்போதும் சிந்தனை வேறாகாமைப் பொருட்டே, “வருதி யென் மனனே” என அழைக்கின்றார்.
இதனால், வண்டு மொய்த்தற்கு முன்பே மலரெடுத்து மாலை செய்து சிவத்துக்கு அணியும் பணிக்குச் சிந்தனை நீங்காமை வேண்டி மனத்தை அறைகூவுகின்றமை காண்க. (2)
|