89. வேட்டே னினது திருவருளை
வினையே னினியித் துயர்பொறுக்க
மாட்டேன் மணியே யன்னேயென்
மன்னே வாழ்க்கை மாட்டுமனம்
நாட்டேன் அயன்மால் எதிர்வரினும்
நயக்கே னெனக்கு நல்காயோ
சேட்டேன் அலரும் பொழில் தணிகை
தேவே ஞானச் செழுஞ்சுடரே.
உரை: உயரத்திலிருந்து தேன் சொரியும் சோலைகள் நிறைந்த தணிகை மலைத் தெய்வமே, ஞானச் செழுஞ்சுடரே, மணியே, அன்னை போல்பவனே, என் அரசே, நினது திருவளைப் பெற விரும்பி இதுகாறும் காத்திருந்தேன்; இனிச் சிறிதும் துயர் பொறுக்க மாட்டேன்; துயர் மிக்க வாழ்க்கையில் என் கருத்தைச் செலுத்த மாட்டேன்; அது குறித்துப் பிரமன் திருமால் ஆகிய தேவர்கள் எதிர்வந்து வற்புறுத்தினாலும் அதனை விரும்பேன்; ஆதலால் எனக்கு நின் திருவருளை நல்குவாயன்றோ, எ. று.
சேண் - உயரம். வானளாவ உயர்ந்த மரங்களாதலால் அவற்றின் பூக்களிலிருந்து தேன் சொரிவது பற்றிச் “சேண் தேன் அலரும் பொழில்” என்று விளக்குகின்றார். வினைகளால் துன்புறும் திறம் பற்றி, “வினையேன்” என்றும், அதனை நீக்கற்குரிய மருந்து திருவருளல்லது பிறிதில்லை என்பதுணர்ந்து அதனையே பெற விழைந்தமை தோன்ற, “நினது திருவருளை வேட்டேன்” என்றும், அதனை எதிர் நோக்கிக் காத்திருந்த சோர்வு புலப்பட “இனி இத்துயர் பொறுக்க மாட்டேன்” என்றும் கூறுகின்றார் நாளும் வந்து தாக்கும் துன்பத்தை “இத்துயர்” என்று சுட்டுகின்றார். துன்பமே தருதலால், “வாழ்க்கை மாட்டு மனம் நாட்டேன்” என இயம்புகிறார். உயிர்கள் உய்தி பெறற் கெனப் படைக்கப் பட்டதாகலின், “வாழ்க்கை மாட்டு மனம் நாட்டேன்” எனப் பிணங்குகின்றார். “இந்தப் பூமி சிவன் உய்யக் கொள்கின்ற ஆறு” என அயனும் மாலும் கூறுபவ ராதலால், “அயன்மால் எதிர்வரினும் நயக்கேன்“ என மொழிந்து, இதனினும் காரணம் பிறிது வேண்டாமையின் அருள் நல்குக என்பார், “எனக்கு நல்காயோ” என்று வேண்டுகிறார்.
இதனால் வாழ்க்கைத் துயர் பொறுக்க மாட்டாமை கூறி அருள் புரிக என வேண்டியவாறாம். (8)
|