890. திருவின் நாயகன் கைப்படை பெறுவான்
திருக்கண் சாத்திய திருமலர்ப் பதத்தார்
கருவின் நின்றஎம் போல்பவர் தம்மைக்
காத்த ளிப்பதே கடன்எனக் கொண்டார்
உருவின் நின்றவர் அருஎன நின்றோர்
ஒற்றி யூரிடை உற்றனர் அவர்க்கு
மருவின் நின்றநன் மணங்கொளும் மலர்ப்பூ
மாலை சூட்டுதும் வருதிஎன் மனனே.
உரை: திருமகள் கணவனான திருமால் கையிலேந்தும் சக்கரப் படையைப் பெறும் பொருட்டு சிவனை வழிபடுவான் தன் கண்ணொன்றை மலராகச் சாத்திய அழகிய திருவடியை யுடையவரும், பிறவிச் சூழலில் உள்ள எம்போலியர்களைக் காப்பதைக் கடமையாகக் கொண்டவரும், உருவாகியவரும் அருவாகியவரும் திருவொற்றியூரின்கண் எழுந்தருளியிருப்பவருமாகிய சிவபெருமானுக்கு மருவகத்தில் நின்ற நல்ல மணங்கொண்ட மலர்களால் பூமாலை தொடுத்தணியலாம், என் மனமே நீ வருக. எ.று.
திருமகட்கு இனிய நாயகன் திருவின்நாயகன் எனப்படுகின்றான் என அறிக. திருமால் கையிலேந்தும் சிறப்புடைப் படையாதலின், சக்கரப் படையைக் கைப்படை என்று கூறுகின்றார். “துணிவண்ணச் சுடராழி கொள்வானெண்ணி, அணி வண்ணத்தலர் கொண்டடியர்ச்சித்த, மணிவண்ணற் கருள் செய்தவன்” (மாற்பேறு) எனத் திருநாவுக்கரசரும் இவ் வரலாற்றைக் குறிக்கின்றார். திருமால் ஆயிரம் பூக்கொண்டருச்சிக்கையில், ஒருபூக் குறையவே தன் கண்ணும் மலர் போறலின் ஒன்றைப் பிடுங்கி அருச்சித்தமையின், “திருக்கண் சார்த்திய திரு மலர்ப் பதத்தார்” என்று தெரிவிக்கின்றார். “அரிமுன் தந்த ஆயிரம் கமலம் கொண்டோர் ஆழியை அளிக்க வல்லோன்” (vi 13:86) என்று கந்தபுராணம் கூறுவது காண்க. மலவிருளின் மறைப்பால் அறிவு மயங்குங் கால் விடாமுயற்சி வாயிலாகத் திருவருள் ஒளி தந்து காத்தளிப்பது சிவத்தின் கடனாதல் இனிது விளக்குகின்றாராகலின், “காத்தளிப்பதே கடனெனக் கொண்டார்” என்றும், மலவிருள் தொடர்பு காரணமாக மக்கள் பிறந்திறந் துழலவேண்டி யிருத்தல் பற்றி, “கருவில் நின்ற வெம் போல்பவர்” என்றும் குறித்துரைக்கின்றார். உருவமாதலும் அருவமாதலும் சிவத்தின் உருவவியல்பாதல் கொண்டு “உருவின் நின்றவர் அருவென நின்றோர்” என்றும், திருவொற்றியூரில் சகளமாய் நின்று அன்புடன் வழிபடுவார்க்கு அருள்புரி மூர்த்தியாதலின், “ஒற்றியூரிடையுற்றனர்” என்றும் இயம்புகின்றார். மருவு - மருவகமென்னும் பூந்தோட்டம்; இதன் கண் மரு, மருக்கொழுந்து முதலிய செடிகள் வளர்க்கப்படும். தலைமை பற்றி மருவகமெனப்படினும் நறுமணந் தரும் பூச்செடிகளும் இங்கே உளவாமாதலின், “மருவினின்ற நன்மணங்கொளும் மலர்ப்பூ மாலை சூட்டுதும்” என வுரைக்கின்றார்.
இதன்கண், மருவகத்து மலரும் மணமிக்க மலர் கொண்டு பூமாலை சூட்ட வருக என மனத்தை அழைக்குமாறு அறிக. (3)
|