892.

     வதன நான்குடை மலரவன் சிரத்தை
          வாங்கி ஓர்கையில் வைத்தநம் பெருமான்
     நிதன நெஞ்சகர்க் கருள்தரும் கருணா
          நிதிய மாகிய நின்மலப் பெருமான்
     சுதன மங்கையர் நடம்செய்யும் ஒற்றித்
          தூய னால்அவர் துணைத்திருத் தோட்கு
     மதன இன்தமிழ் மாலையோ டணிபூ
          மாலை சூட்டுதும் வருதிஎன் மனனே.

உரை:

     முகம் நான்குடைய மலரோன் தலையைக் கிள்ளிப் பலிக்கலனாகக் கையிற் கொண்ட நம்முடைய பெருமானும், வறுமையால் வாடும் நெஞ்சுடைய ஏழை மக்கட்கு அருளாகிய செல்வம் வழங்கும் கருணாநிதியாகிய மலரகிதனாகிய பெருமானும், செல்வ மடந்தையர் நடம் புரியும் ஒற்றிநகர்க்கண் உறையும் தூயனுமாகிய சிவபெருமானுடைய அழகிய இரண்டு தோள்கட்கும் பெருமிதம் பயக்கும் இனிய தமிழ் மாலையுடன் அழகிய பூமாலையும் அணிந்து மகிழ்வோம்; மனமே, நீ வருக. எ.று.

     வதனம் - முகம். மலரவன் - பிரமன். தாமரை மலர்மேல் இருப்பதால் அவன் இவ்வாறு குறிக்கப்படுகிறான். ஐந்தலை யுடையனாய் அகங்காரமிக்கிருந்தமையால் வயிரவரை விடுத்துச் சிவன் அப் பிரமன் தலையொன்று கிள்ளி வரச் செய்தார். அவ் வரலாறுதான், “மலரவன் சிரத்தை வாங்கி ஓர் கையில் வைத்த நம் பெருமான்” என்று குறிக்கப்படுகிறது. கந்தபுராணம், “செங்கமலத்தோன் சென்னி யிகழ்ந்தது நம்மை; உச்சி இருந்ததே யதனை வல்லே அகழ்ந்தனை கரத்திலேந்தி அவன் உயிர் நல்கி” (6:13:167) வருக என்று சிவன் வயிரவர்க்குக்கட்டளை யிடுவதைக் கூறுகிறது. நிதனம் - வறுமையால் உளதாகும் வாட்டம். இன்மையால் வாடி வருந்துவோர்க்குச் சிறந்த அருட் செல்வம் நல்கி வாழ்வித்தலால் “நிதன நெஞ்சகர்க் கருள்தரும் கருணாநிதியமாகிய பெருமான்”என்றும், இத்தகைய செயலுடைமையால் அவன் விகாரமடைவதிலன் என்பது தோன்ற “நின்மலப் பெருமான்” என்றும் உரைக்கின்றார். சுதனம் - பெருஞ் செல்வம். பிறர் கொடுப்பக் கொள்ளாது வழி வழி வரும் மிக்க செல்வம் சுதனமாகும். செல்வமிக்க பெருமனைகளில் இளமகளிர்க்கு மனப் பயிற்சியும் நினைவாற்றலும் உடல் வன்மையும் இனிது எய்துதற்கு வாய்த்த கல்வி இசைநாடகக் கல்வியாதலின், அது வளமாகப் பெருகிய வூர் என்றற்குச் “சுதன மங்கையர் நடம் பயில் ஒற்றி” என்றும், இசையும் கூத்தும் காமநோய் விளைவிக்கும் எனச் சிலர் கூறுவது தவறு என்பது தோன்ற, சிவனை “ஒற்றித் தூயன்” என்றும் பரவுகின்றார். தூய இனிய செந்தமிழ்ச் சொற்களாலியன்ற பாமாலை பெருமிதம் பயப்பது ஒருதலை யாதலால், “மதன வின்றமிழ்” என்று பாராட்டி மகிழ்கின்றார்.

     இதன்கண், மனமே, தமிழ் மாலையும் பூமாலையும் ஒற்றியூர்ப் பெருமானுக்குச் சூடுவோம் வருக என்பதாம்.

     (5)