893. கஞ்சன் அங்கொரு விஞ்சனம் ஆகிக்
காலில் போந்துமுன் காணரு முடியார்
அஞ்ச னம்கொளும் நெடுங்கணாள் எங்கள்
அம்மை காணநின் றாடிய பதத்தார்
செஞ்சொன் மாதவர் புகழ்திரு வொற்றித்
தேவர் காண்அவர் திருமுடிக் காட்ட
மஞ்ச னங்கொடு வருதும்என் மொழியை
மறாது நீஉடன் வருதிஎன் மனனே.
உரை: அந்நாளில் பிரமதேவன் உயர்ந்ததோர் அன்னப் பறவையாகிக் காற்றைப் போல உயரச் சென்றும் காண்டற்கு அரிதாகிய திருமுடியை யுடையவரும், மைதீட்டிய நீண்ட கண்ணையுடையளாகிய எங்கள் தாயாகிய உமையம்மை காண அம்பலத்தே நின்று ஆடிய திருவடியை யுடையவரும், அறங்கூறும் பெரிய தவமுடையோர் புகழும் திருவொற்றியூர்த் தேவருமான பெருமானுடைய திருமுடிக்கு ஆட்டிமகிழத் திருமஞ்சனம் கொண்டு வரவேண்டும்; என் சொல்லை மறுக்காமல் மனமே, நீ என்னுடன் வருக. எ.று.
கஞ்சன் - தாமரைப் பூவில் இருக்கும் பிரமதேவன். விஞ்சும் அனம் - தன்மையால் உயர்ந்த அன்னப் பறவை. கால் - காற்று. இன்: உவமவுருபு. பிரமன் சிவபிரான் திருமுடியைக் காண்டற்கு அன்னப் பறவை யுருக்கொண்டு காற்றினும் கடுகி உயரப் பறந்து சென்றும் காண மாட்டானாயினமையின், “காலிற் போந்தும் முன் காணரு முடியார்” என்று கூறுகின்றார். மகளிர், கண்களில் மை தீட்டிக் கொள்ளும் மரபினராதல் பற்றி, உமையம்மையை, “அஞ்சனம் கொளும் நெடுங்கணாள்” எனவும், அம்பலத்தில் அம்மை காண ஆடுவது ஈசன் திறம் என்பதனால், “அம்மை காண நின்றாடிய பதத்தார்” எனவும் மொழிகின்றார். “தில்லைச் சிற்றம்பலவன், மைஞ்ஞின்ற வொண்கண் மலைமகள் கண்டு மகிழ்ந்து நிற்க நெய்ஞ்ஞின் றெரியும் விளக்கொத்த நீலமணி மிடற்றான், கைஞ்ஞின்ற ஆடல்” (கோயில்) என்று நாவுக்கரசர் பாடுவதறிக. தவத்தின் விளைவாக எஞ்ஞான்றும் அறமே பேசும் சிறப்புடையர் மாதவராதலின், அவர் வழங்கும் சொல் “செஞ்சொல்” என்று புகழப்படுகிறது. மஞ்சனம் - அபிடேகித்தற்குரிய பல்வகை விரைப்பொருள். பால், நெய், தயிர், தேன், இளநீர், மஞ்சள் முதலியனவும் இதனுள் அடங்கும். சிவனுக்குத் திருமஞ்சன மாட்டுவது சிறப்பு என்றும், திருமஞ்சன மாடுவதில் சிவனுக்கு விருப்பு என்றும் தமிழ்நாட்டவர் கூறுவது இயல்பாதலால், “திருமுடிக்காட்ட மஞ்சனம் கொடு வருதும்” என உரைக்கின்றார். பிணங்கியோடும் இயல்பிற்றாதலால் “என் மொழியை மறாது உடன் வருதி” என்று கூறுகிறார்.
இதன்கண், மனம் ஒன்றிச் சிவனைத் திருமஞ்சனம் ஆட்ட வருக என நெஞ்சை ஒருப்படுக்குமாறு காணலாம். (6)
|