894. சூழு மாலயன் பெண்ணுரு எடுத்துத்
தொழும்பு செய்திடத் தோன்றிநின் றவனைப்
போழும் வண்ணமே வடுகனுக் கருளும்
பூத நாதர்நற் பூரணா னந்தர்
தாழும் தன்மையோர் உயர்வுறச் செய்யும்
தகையர் ஒற்றியூர்த் தலத்தினர் அவர்தாம்
வாழும் கோயிற்குத் திருவல கிடுவோம்
மகிழ்வு கொண்டுடன் வருதிஎன் மனனே.
உரை: திருமாலும் பிரமனும் தமக்குள்ளே சூழ்ந்து பெண்ணுருவொன்றமைத்துத் தொண்டு செய்விக்க, எதிரே தோன்றி மால் வேறு பிரமன் வேறாகப் பிளக்கும் வண்ணம் வயிரவ தேவர்க்கு அருள் புரியும் பூதநாதரும், நல்ல நிறைந்த ஆனந்தமானவரும், பணியும் பண்புடையோர் உயர்வுபெறச் செய்யும் தகவுடையவரும், திருவொற்றியூர்த் தலத்தில் வீற்றிருப்பவருமாகிய சிவபெருமான் எழுந்தருளும் திருக்கோயிலுக்கு மாறுகொண்டு திருவலகிடலாம்; மனமே, நீ மகிழ்ச்சியுடன் என்னோடு வருக. எ.று.
சிவனிடத்தே தோன்றிய வயிரவக் கடவுளின் ஆற்றலை யளத்தல் வேண்டி மாலும் பிரமனும் தத்தம் கூறுகளைக் கொண்டு பெண்ணுருச் செய்து தொண்டு செய்ய விடுப்ப, அப் பெண்ணின் மாயவலைக்குள் அகப்படாதவாறு வயிரவர்க்குச் சிவன் ஞானக் காட்சி தந்து உதவ, அவரும் பெண்ணெனக் கருதாமல் மாய்த்தற்குரிய மாயவுருவென்று மதித்து வாளாற் போழ்ந்து மாலயன் கூறுகளை வேறுசெய்து வென்றார். அதனால் அவரைச் சிவநகரில் தொண்டாற்றும் பூதகணத் தலைவராக்கினர்; அக் குறிப்புப் புலப்பட, “வடுகனுக் கருளும் பூதநாதர்” என்று புகல்கின்றார். தொழும்புருவன்றி வேறுருக் கொண்டு சிவநகர் குறுகலாகாமையின், “தொழும்பு செய்திட” எனவும், பெண்ணுரு வெடுப்பினும் உள்ளுறையும் மாலயன் கூறுகள் ஆணாதல் உணர்ந்தமை தோன்ற, “அவனை” எனவும் குறிக்கின்றார். இன்னோரன்ன செயல்களால் தம்பாற் குறைவாக இருந்த ஆனந்தத்தைச் சிவன் பூரணமாக்கிக் கொண்டாரென்பதன்று; சிவன் இயல்பாகவே பூரணானந்தன் என்றற்கு, “நற்பூரணானந்தர்” எனப் போற்றுகின்றார். தாழ்ந்தொழுகும் பண்புடையார் சைவம் சார்ந்தொழுகின் ஞானத்தால் நிறைந்து உயர்வுபெறுவர் என்ற சைவக் கொள்கையை யுள்ளத்திற்கொண்டு சிவனது பெருந்தன்மையைப் பேசுகின்றாராதலின், “தாழும் தன்மையோர் உயர்வுறச் செய்யும் தகையர்” என்று கூறுகின்றார். தகை, ஈண்டுப் பெருந்தன்மை மேற்று. “தாழ்வெனும் தன்மையோடு சைவமாம் சமயம் சாரும் ஊழ் பெறலரிது சால வுயர்சிவ ஞானத்தாலே போழிலா மதியினானைப் போற்றுவார் அருள் பெற்றாரே” (2:92) என்று சிவஞான சித்தியார் உரைப்பது காண்க. தாழ்வெனும் தன்மை சைவத்தில் ஞானம் பயந்து சிவ வழிபாட்டால் அருள் பெறுவிக்கும் என்பது கருத்து. திருவலகிடுதல், மாறு கொண்டு திருக்கோயில் அகமும் புறமும் தூய்மை செய்தல்.
இதனால் திருக்கோயில் திருவலகிடுதல் முதலிய சரியைப் பணி செய்வோமென மனத்தை ஒருப்படுத்துமாறு அறியலாம். (7)
|