895. விதியும் மாலுமுன் வேறுரு வெடுத்து
மேலும் கீழுமாய் விரும்புற நின்றோர்
நதியும் கொன்றையும் நாகமும் பிறையும்
நண்ணி ஓங்கிய புண்ணியச் சடையார்
பதியு நாமங்கள் அனந்தமுற் றுடையார்
பணைகொள் ஒற்றியூர்ப் பரமர்கா ணவர்தாம்
வதியும் கோயிற்குத் திருவிளக் கிடுவோம்
வாழ்க நீஉடன் வருதிஎன் மனனே.
உரை: பிரமனும் திருமாலும் வேறு வேறு உருக்கொண்டு முறையே முடிதேடி வானிலும் அடிதேடிப் பாதலத்திலும் விரும்பிச் செல்ல நின்றாங்கு நின்ற பெருமானும், கங்கையும் கொன்றையும் பாம்பும் பிறையும் பொருந்தி யிருந்தோங்கிய புண்ணியம் மிக்க சடையையுடையவரும், தமக்கென ஊரும்பேரும் எண்ணிறந்தன வுடையவரும், நன்செய் வயல்கள் பொருந்திய திருவொற்றியூர்ப் பரமனார்காண்; அவர்தாம் எழுந்தருளும் திருக்கோயிலுக்குத் திருவிளக் கேற்றலாம்; மனமே என்னுடன் வருக, வாழ்க. எ.று.
உயிர்கட்கு வேண்டிய உடம்புகளைப் படைத்து அவற்றிற்குரிய வாழ்நாளும் சாநாளும் விதித்துவிடுவதுபற்றிப் பிரமனுக்கு “விதி” என்பதும் ஒரு பெயர். விதி அன்னத்தின் உருவும், மால் பன்றி யுருவும் கொண்டமையின், “வேறுரு வெடுத்து” என்றும், முறையே சிவனுடைய திருமுடியும் திருவடியும் காணா தொழிந்தனராயினும், வெறுப்படைந்திலராதலின், “விரும்புற நின்றோர்” என்றும் இசைக்கின்றார். நாகமும் பிறையும் மாறுடையனவாயினும் ஒன்றியிருந்து உயர்தற்கிடமாதலின் சிவன் சடையை, “ஓங்கிய புண்ணியச் சடை” என்று சிறப்பிக்கின்றார். சிவனுக்கு ஊரும் பேரும் எண்ணிறந்தன வாதலால், “பதியு நாமங்கள் அனந்த முற்றுடையார்” என்கின்றார். “பேரோர் ஆயிரமும் உடையானைப் பேசினாற் பெரிதும் இனியானை” (நீடூர்) என்று நம்பியாரூரர் பாடுகின்றார்.
இதன்கண், திருக்கோயிலில் திருவிளக் கேற்றலாம் வருக என மனத்தினை அறை கூறுவுகின்றார். (8)
|