896. குளங்கொள் கண்ணினார் குற்றமே செயினும்
குணமென் றேஅதைக் கொண்டருள் புரிவோர்
உளங்கொள் அன்பர்தம் உள்ளகத் திருப்போர்
ஒற்றி யூரிடம் பற்றிய புனிதர்
களங்கொள் கண்டரெண் தோளர்கங் காளர்
கல்லை வில்எனக் கண்டவர் அவர்தம்
வளங்கொள் கோயிற்குத் திருமெழுக் கிடுவோம்
வாழ்க நீஉடன் வருதிஎன் மனனே.
உரை: நெற்றியில் அமைந்த கண்ணை யுடையவரும், தொண்டராயினார் குற்றமே செய்தாலும், குணமென்று கொண்டு இன்ப அருள் செய்பவரும், சிந்தையிற் கொண்டு அன்பு செய்பவர் யாவாராயினும் அவரது உள்ளத்தில் விரும்பி யுறைபவரும், திருவொற்றியூரையிடமாகக் கொண்ட தூயரும், நஞ்சின் கறைபொருந்திய கழுத்தையுடையவரும், தோள்கள் எட்டுடையவரும், எலும்பு மாலை யணிந்தவரும், மலையை வில்லாகச் செய்தவருமாகிய சிவபெருமான் எழுந்தருளும் இடமகன்ற திருக்கோயிற்குத் திருமெழுக்கிடலாம்; மனமே, நீ என்னுடன் வருக. எ.று.
குளம் - நெற்றி. தொண்டராயினார் குற்றம் செய்வராயின், அது செய்த கருவியின் மேலதாக்கிப் பொறுக்கப்படுகிற முறைமை தோன்ற, “குற்றமே செயினும் குணமென்றே யதைக் கொண்டருள் புரிவோர்” என்று கூறுகிறார். அன்பரது அன்புடை நெஞ்சம் ஞானவொளி நிறைந்து விளங்குதலின், சிவன் கோயில் கொள்வதை நினைந்து “உளங்கொள் அன்பர்தம் உள்ளகத் திருப்போர்” என வுரைக்கின்றார். சிவன்பால் அன்பே சிவஞானம் என்பது சைவநூல் துணிபு. “ஞானம் ஈசன்பால்அன்பே என்றனர் ஞானமுண்டார்” என்று பன்னிரண்டாம் திருமுறை இசைக்கின்றது. திவொற்றியூர்க்கண் இடங் கொண்டாராயினும் இடம் பொருள் முதலிய பற்றுக்கு இலக்காயவரல்லரென்றற்கு “ஒற்றியூர் இடம் பற்றிய புனிதர்” எனப் பரவுகின்றார். களம் - நஞ்சுண்டதால் உண்டான கறை. கங்காளம் - என்பு மாலை; என்புக் கூட்டுக்குமாம். “கங்காளராய் வருங்கடல் மீளநின் றெம்மிறை நல்வீணை வாசிக்குமே” (தனி) என்று நாவுக்கரசர் கூறுவது காண்க. கல் - மேருமலை.
இதனால், மனத்தைத் திருவொற்றியூர்த் திருக்கோயிற்குத் திருமெழுக்கிட அழைக்கின்றார். (9)
|