897. பணிகொள் மார்பினர் பாகன மொழியாள்
பாகர் காலனைப் பாற்றிய பதத்தார்
திணிகொள் வன்மத மலைஉரி போர்த்தோர்
தேவர் நாயகர் திங்களம் சடையார்
அணிகொள் ஒற்றியூர் அமர்ந்திடும் தியாகர்
அழகர் அங்கவர் அமைந்துவீற் றிருக்கும்
மணிகொள் கோயிற்குத் திருப்பணி செய்தும்
வாழ்க நீஉடன் வருதிஎன் மனனே.
உரை: பாம்புகள் கொண்ட மார்பினரும் பாகு போன்ற மொழிகளையுடைய உமாதேவியை இடப்பக்கத்தே யுடையவரும், நமனை உதைத்துப் போக்கிய பாதத்தை யுடையவரும், திணிந்த வலிய மதம் பொழியும் மலை போன்ற யானையைத் தோலுரித்துப் போர்த்துக் கொண்டவரும், தேவர்கட்குத் தலைவரும், பிறைத்திங்களை யணிந்த சடையை யுடையவரும், அழகு கொண்ட திருவொற்றியூர்க்கண் அமர்ந்தருளும் தியாகேசருமாகிய அழகனார் அமைந்து வீற்றிருக்கும் மணிகள் விளங்கும் கோயிலுக்குத் திருப்பணி செய்யலாம்; மனமே, நீ என்னுடன் வருக. எ.று.
பணி - பாம்பு. மாலைபோல் மார்பிற் கிடந்து புரளுவதால் “பணி கொள் மார்பினர்” என்று பகர்கின்றார். பாகு - கரும்பின் பாகு. பாற்றுதல் - போக்குதல். தம்முடைய திருவடியால் உதைத்து எமனை வீழ்த்தியது நினைந்து, “காலனைப் பாற்றிய பதத்தார்” என்று கூறுகின்றார். மதமலை - யானைக்கு வெளிப்படை. தசை திணிந்தும், என்பு வன்மை மிக்கும் இருப்பது விளங்கத் “திணிகொள் வன்மத மலை” என்று சொல்லுகின்றார். உரி - தோல்; ஆகுபெயர். திருவொற்றியூரில் சிவனுக்குத் தியாகர் என்பது பெயர். பணி செய்தலாவது, பழுது பார்த்தல்.
இதனால், திருவொற்றியூர்த் திருக்கோயிற்குத் திருப்பணி செய்வோம் மனத்தை யழைக்கின்றார். (10)
|