899.

     மூவரை அளித்த முதல்வனை முக்கண்
          மூர்த்தியைத் தீர்த்தனைப் பெரிய
     தேவரைக் காத்த செல்வனை ஒற்றித்
          தியாகனை நினைந்துநின் றேத்தாப்
     பாவரை வரையாப் படிற்றரை வாதப்
          பதடரைச் சிதடரைப் பகைசேர்
     கோவரைக் கொடிய குணத்தரைக் கண்டால்
          கூசுவ கூசுவ விழியே.

உரை:

     பிரமன் முதலிய மூவரைத் தந்த முதற் கடவுளும், மூன்று கண்களையுடைய மூர்த்தியும், தீர்த்தனும், பெரிய தேவர்களைக் காத்த செல்வனும், ஒற்றியூர்க்கண் வீற்றிருக்கும் தியாகப்பெருமானுமாகிய சிவனை நேர்நின்று நெஞ்சின்கண் நினைந்து வழிபடாத பாவிகளையும் வரையறை யில்லாத படிறுகள் செய்பவரையும், வீண் வாதம் புரியும் பதடிகளையும், சிதடர்களையும், பகைமை சேர்ந்த கோபமுடையவர்களையும், கொடிய குணமுடையவர்களையும் பார்க்க நேர்ந்தால் கண்கள் கூசுகின்றன, காண். எ.று.

     பிரமன், மால், உருத்திரன் என்ற மூவரையும் தோற்றுவிக்கும் தலைவனாதலால் சிவனை, “மூவரை யளித்த முதல்வன்” என மொழிகின்றார். “மூவருமாகி யிருவருமாகி முதல்வனுமாய் நின்ற மூர்த்தி” (பேணு) என்று ஞானசம்பந்தர் கூறுவர். மூன்று கண்களையுடைய உருவனாய் விளங்குதலால் “முக்கண் மூர்த்தி” என்று இயம்புகின்றார். தீர்த்தன் - பரவப்படுபவன். “பிறவித் துயர் கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்தன்” (திருவெம்) என மணிவாசகர் எடுத்தோதுவது காண்க. கடலில் விடமெழுந்த காலை யஞ்சியோடிய திருமால் பிரமன் இந்திரன் முதலிய பெரிய தேவர்களை அவ்விடத்தைத் தான் உண்டு காத்தமை பற்றிச் சிவனைப் “பெரிய தேவரைக் காத்த செல்வன்” என்று சிறப்பிக்கின்றார். திருவொற்றியூரில் தியாகப்பெருமான் எனப்படுவதுகொண்டு, “ஒற்றித் தியாகன்” என வுரைக்கின்றார். நெஞ்சு கலந்து நினைத்தலின்றி யேத்துவதிற் பயனில்லை யென்றற்கு “நினைந்து ஏத்தா” என்றும், அது செய்பவரைப் பாவிகள் என்பார் “பாவரை” யென்றும் குறிக்கின்றார். இவரொத்த பாவிகளைக் கூறலுற்று, “வரையாப் படிற்றர்” என்று சிலரைக் கூறுகின்றார். படிற்றர் - படிறு செய்பவர், படிறு - குற்றம். குற்றவகை பலவற்றையும் வரையறையின்றிச் செய்பவ ரென்றற்கு, “வரையாப் படிற்றர்” என்கின்றார். நற்பயனாகிய உள்ளீடில்லாத நெல்லைப் பதடி என்பர். பயனில் சொல் பாராட்டுபவனை மக்கட் பதடி எனத் திருவள்ளுவரும், இன்பமில்லாத நாளைப் “பதடிவைகல்” (குறுந். 323) எனச் சங்கச் சான்றோரும் கூறுவர். பிற்காலத்தே பதடி, பதடென்றும் பதரென்றும் வழக்காற்றில் மாறிவிட்டது. நல்லறிவாகிய உள்ளீடில்லாமையால் சிவனை நினைந் தேத்தாதவரை “வாதப்பதடர்” என்று இசைக்கின்றார். இவரது வாதம் மெய்ம்மை துணிதற்குப் பயன்படா தென்றற்கு “வாதப் பதடர்” எனக் குறிக்கின்றார். சிதடன் - அறிவில்லாதவன், “செம்மைநலம் தெரியாத சிதடர்” (அச்சோ) எனத் திருவாசகம் உரைப்பது காண்க. அன்பால் இளையரைத் திருத்துதற் பொருட்டும், பகைமையால் தெறுதற் பொருட்டும் கோபிப்பார் உளராக, அவருள் பின்னோர் தள்ளத்தக்கவராதலின் “பகைசேர் கோவர்” என்று சிறப்பித்துரைக்கின்றார். கொடுமை செய்யும் தொழிற் பண்புடையாரையே இங்கே “கொடிய குணத்தர்” என்று கூறுகின்றார்.

     இதனால், சிவனை நினைந்து ஏத்தாதாரை எடுத்துரைத்து அவர்களைக் காண்டற்குக் கண்கள் வெறுப்புற்றுக் கூசுகின்றன என்பதாம்.

     (2)