9. ஈயென்று நானொருவரிட நின்று கேளாத
இயல்பு மென்னிட மொருவரீ
திடுவென்ற போதவர்க் கிலையென்று சொல்லாம
லிடுகின்ற திறமும் இறையாம்
நீயென்று மெனைவிடா நிலையும் நானென்று முன்
னினை விடா நெறியு மயலார்
நிதியொன்று நயவாத மனமு மெய்ந்நிலை நின்று
நெகிழாத திடமு முலகில்
சீயென்று பேயென்று நாயென்று பிறர்தமைத்
தீங்கு சொல்லாத தெளிவும்
திரமொன்று வாய்மையும் தூய்மையும் தந்துநின்
திருவடிக் காளாக்கு வாய்
தாயொன்று சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.
உரை: தாயாய்த் தலையளி செய்யும் சென்னையிற் கந்த கோட்டத்துள் சிறக்கும் கோயிலில் எழுந்தருளும் கந்த வேளே, தண்ணிய முகத்துத் தூய மணிகளுட் சைவமணியாய்த் திகழும் ஆறுமுகம் கொண்ட தெய்வமணியே, நான் ஒருவரிடம் சென்று அவர் முன்னே நின்று ஒன்று ஈக என்று கேளாத இயல்பும், என்னிடம் ஒருவர் வந்து இதனைத் தருக என்று கேட்கும் போது இல்லை யென்று சொல்லாமல் தருகின்ற தன்மையும், இறைவனாகிய நீ எப்போதும் என்னைக் கைவிடாத நிலைமையும், நானும் எக்காலத்தும் உள்ளத்தில் உன்னினைவு மறந்திடாத நெறிமையும், அயலவர்பால் உள்ள செல்வத்தைக் கண்டு அதனைப் பெற விரும்பாத மனவியல்பும், மெய்ம்மைக்கண் நிலையாக நிற்கும் நெஞ்சத் திண்மையும், சீயென்றும் பேயென்றும் நாயென்றும் பிறரை இகழ்ந்து வையும் உலகவர் போல் தீச் சொல் சொல்லாத தெளிவும், உறுதி வாய்ந்த வாய்மையும் அகத் தூய்மையும் தந்தருளி நின் திருவடிக்கு ஆளாக்குவாயாக. எ. று.
சென்னை வாணர் செயலைச் சென்னை நகர் மேல் ஏற்றித் “தாயொன்று சென்னை” என்று கூறுகின்றார். இன்மை வந்து வருத்துமிடத்து எவர்பாலும் சென்று நின்று இரக்கத் தூண்டுமாதலின் அவ்வியல்பு கூடாதென்றற்கு “ஈயென்று நான் ஒருவரிடம் நின்று கேளாத இயல்பு” தருக எனவும், “மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்”றென் பராதலின், “என்னிடம் ஒருவர் ஈது இடு என்றபோது அவர்க்கு இலையென்று சொல்லாமல் இடுகின்ற திறம்” தருக எனவும் வேண்டுகிறார். கடவுளை நம்பினோர் கைவிடப்படா ராதலால், அந்நம்பிக்கை தம் முள்ளத்தில் உறுதியாக அமைய வேண்டும் என்றற்காக, “இறையாம் நீ என்றும் எனைவிடா நிலையும் நான் என்றும் உன் நினைவிடா நெறியும்” தருக என முறையிடுகின்றார். பிறன்பொருள்மேல் விருப்பமுண்டாகிய வழித் தவறாய எண்ணங்கள் தோன்றித் தீச் செயற்கண் செலுத்துமாதலால், “அயலார் நிதி யொன்றும் நயவாத மனம்” வேண்டும் என்றும், மெய்ந் நெறியில் நிற்பார்க்கு இத்தகைய விருப்பங்கள் தோன்றாவாதலின், “மெய்ந்நிலை நின்று நெகிழாத திடம்” வேண்டும் என்றும் விளம்புகின்றார். தீயதன் தீமை யோர்ந்து நீங்கும் அறிவுத் தெளிவின்மையின் தவறாய கூறுவாரையும் செய்வாரையும் உலகோர் சீயென்றும் பேயென்றும் நாயென்றும் ஏசுகின்றனராதலால், அத் தீமொழிகள் தம்பால் உளவாதல் கூடா தென்றற்கு, “உலகிற் சீயென்று பேயென்று நாயென்று பிறர்தமைத் தீங்கு சொல்லாத தெளிவு” வேண்டும் எனவுரைக்கின்றார். திரம், நிலைபேறு; உறுதியுடைமை. “வாய்மையால் மனம் தூய்மை யுறுதலின், இரண்டும் ஒருங்கு அமைவது குறித்துத் “திரமொன்று வாய்மையும் தூய்மையும்” தருக என்று வேண்டுகிறார். இந்நலமனைத்தும் கொண்டு திருவடிக் காளாவோர் சிறந்த மெய்யன்பராய் வீடு பேற்றுக்குச் சமைகின்றாராதலின், “தந்துநின் திருவடிக் காளாக்குவாய்” என விண்ணப்பிக்கின்றார்.
இதனால், கந்த வேள் திருவடிக் காளாவார்க் கமைய வேண்டிய நற் பண்புகளை நல்க வேண்டுமென விண்ணப்பித்தவாறாம். (9)
|