90.

    கல்லா நாயே னெனினு மெனைக்
        காக்கும் தாய்நீ யென்றுலகம்
    எல்லா மறியும் ஆதலினால்
        எந்தாய் அருளா திருத்தியெனில்
    பொல்லாப் பழி வந்தடையு முனக்
        கரசே யினியான் புகல்வ தென்னே
    செல்லார் பொழில் சூழ் திருத்தணிகைத்
        தேவே ஞானச் செழுஞ்சுடரே.

உரை:

     மேகம் தவழும் சோலைகள் சூழ்ந்துள்ள திருத் தணிகையில் எழுந்தருளும் தெய்வமே, ஞானச் செழுஞ்சுடரே, கற்றற்குரிய வற்றைக் கல்லாதவனாயினும், என்னைக் காத்தளிக்கும் தாய் நீயே என்பது அறிஞர் உலகு அனைத்தும் தெரிந்த செய்தியாகும்; ஆகவே எந்தையாகிய நீ இனியும் அருள் புரியா திருப்பாயேல், நீங்காத பழி உனக்கு வரும்; வேறே யான் சொல்லுதற்கில்லை. எ. று.

     கற்பன கல்லாதார் கடைப் பட்டொழிவது இயல்பாதலால், “கல்லா நாயேன்” என்றும், கடையனாயினும் என்னைத் தாய்போல் தலையளிப்பவன் நீ என்பதை உயிர்கட்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பறிந்த சான்றோர் உரைப்பது பற்றி, “எனைக் காக்கும் தாய்நீ என்று உலகமெல்லாம் அறியும்” எனவுரைக்கின்றார். “தாயாய் முலையைத் தருவானே” (ஆனந்த) எனத் திருவாதவூரரும், “தாயாகிய வுலகங்களை நிலைபேறுசெய் தலைவன்” (நெய்த்தானம்) எனத் திருஞானசம்பந்தரும் கூறுவது காண்க. உலகமென்பது ஈண்டு உயர்ந்த சான்றோர் மேற்று. அருட்பேறு காலம் தாழ்ப்பது பொறாது வருந்துவது தோன்ற “அருளாதிருத்தியெனில் பொல்லாப் பழி வந்தடையும் நினக்கு” எனவும், “பொல்லாப் பழி வந்தடையும்” என இறுதி வினையை இயம்புதலால், “இனி யான் புகல்வது என்னே” எனவும் உரைக்கின்றார்.

     இதனால் காலம் நீட்டிக்காது அருளை வழங்குக என வேண்டிக் கொண்டவாறாம்.

     (9)