900.

     அண்டனை எண்தோள் அத்தனை ஒற்றி
          அப்பனை ஐயனை நீல
     கண்டனை அடியர் கருத்தனைப் பூத
          கணத்தனைக் கருதிநின் றேத்தா
     மிண்டரைப் பின்றா வெளிற்றரை வலிய
          வேற்றரைச் சீற்றரைப் பாபக்
     குண்டரை வஞ்சக் குடியரைக் கண்டால்
          கூசுவ கூசுவ விழியே.

உரை:

     அண்டங்க ளெல்லாவற்றையும் உடையவனும், எட்டுத் தோள்களையுடைய அத்தனும், ஒற்றியப்பனும், ஐயனும், நீலகண்டனும், அடியார்களின் கருத்தில் இருப்பவனும், பூத கணங்களை யுடையவனும் ஆகிய சிவபெருமானை, நேர் நின்று மனத்தில் எண்ணி ஏத்துதல் செய்யாத மிண்டர்களையும், எதற்கும் முந்துறும் வெள்ளறிவுடையவர்களையும், வன்மையால் வேறுபாடு இயல்பினரையும், சிறிதிற்குச் சினக்குமவர்களையும், பாவம் செய்யும் குண்டர்களையும், வஞ்சமும் கட்குடியு முடையவர்களையும் காணநேர்ந்தால் கண்கள் கூசுகின்றன, காண், எ.று.

     அண்டன் - அண்டங்கள் அத்தனையும் படைத்தளித்து ஒடுக்குதலுடையவன்; தேவனுமாம். சிவனுக்கு முகம் ஐந்தும் தோள் எட்டும் உண்டு என்பர்; “இரங்கிடாய் எண்தோள் முக்கண் எம்மானே” (குழை) என்று திருவாசகம் உரைப்பதறிக. இவ்வாறே திருமுறைகள் பலவும் கூறுதலால் “எண்டோள் அத்தன்” என்று இயம்புகிறார். அப்பன் - தந்தை. ஐயன் - தலைவன். திருவடியைச் சிந்திக்கும் பெருமக்கள் உள்ளத்தில் இருப்பவனாதலால் “அடியார் கருத்தன்” என்றும், எப்போதும் அவன் ஏவிய செய்தொழுகும் கூட்டம் பூதகணங்களைச் சிவகணங்கள் என்றும் புராணங்கள் புகல்கின்றன. மிண்டர் - மெய்வலி மிக்கவர். புல்லறிவுடைமையால் எதற்கும் நான் நான் என்று முந்தும் செயலுடைமை பற்றிப் “பின்றா வெளிற்றர்” என்று பேசுகின்றார். பின்றுதல் - பிற்படுதல். பின்றா எனவே முந்துதல் பெற்றாம். வெளிறு - புல்லறிவாண்மை. வலிய வேற்றர், மெய்வன்மை காரணமாக எவரோடும் வேறுபட்டுப் பூசல் தொடுப்பவர். சீற்றர் - முன் கோபிகள்; சிறிதிற்குப் பெருஞ்சினங் கொள்வோருமாம். குண்டர் - குன்றர் என்பதன் மரூஉ. பாவக் குன்று போல்பவரைப் “பாவ குண்டர்” என்றும், வஞ்சித்தலும் கட்குடித்தலும் ஆகிய தீச் செயலரை “வஞ்சக் குடியர்” என்றும் கூறுவர்.

     இதனால், சிவனைக் கருத்திற் கருதி வழிபடாதவரைக் காண்டற்குக் கண்கள் விரும்பாமற் கூசுகின்றன என்பதாம்.

     (3)