903. சடையனை எவர்க்கும் தலைவனைக் கொன்றைத்
தாரனைச் சராசர சடத்துள்
உடையனை ஒற்றி ஊரனை மூவர்
உச்சனை உள்கிநின் றேத்தாக்
கடையரைப் பழைய கயவரைப் புரட்டுக்
கடியரைக் கடியரைக் கலக
நடையரை உலக நசையரைக் கண்டால்
நடுங்குவ நடுங்குவ மனமே.
உரை: சடை யுடையவனும் எத்திறத்தார்க்கும் தலைவனும் கொன்றை மாலையணிந்தவனும், சராசரங்களினுள்ளும் சடப்பொருளுள்ளும் உடையவனும், திருவொற்றியூரை யுடையவனும், மூவர்க்கும் உச்சியிலுள்ளவனுமாகிய சிவபெருமானை உள்ளத்தே நினைந்து நின்று ஏத்துதல் செய்யாத கடையரையும், பழமையான கயவரையும், புரட்டுச் செய்வதில் மிக்கவரையும், குற்றமுடைமையால் விலக்கற்குரியவரையும், கலகம் விளைவிக்கும் தீயொழுக்கத்தாரையும், உலகியலிற் பற்றுடையாரையும் காண நேர்ந்தால் மன முதலாகவுள்ள கரணங்கள் யாவும் நடுங்குகின்றன. எ.று.
எத்தெய்வத்தை நினைவிற் கொண்டு வழிபடினும், அத்தெய்வமாகி அவ்வழிபாட்டை யேற்று அருள் வழங்குதலின், சிவனை “எவர்க்கும் தலைவன்” என்று இயம்புகின்றார். உயிர்ப் பொருள் சரம் அசரம் என இருவகையாகவும், உயிரில்லன சடப்பொருள் எனவும் கூறப்படும். சராசரமாகிய உயிரினத்துள்ளும் சடப்பொருளின் உள்ளும் இடமாகவுடையனாதலால் “சராசர சடத்துள் உடையன்” என வுரைக்கின்றார். பிரமன் மால் உருத்திரன் ஆகிய மூவராலும் உச்சியிற் கொண்டு போற்றப் படுமாறு புலப்பட “மூவர் உச்சனை” என மொழிகின்றார். உச்சியன், உச்சன் என வந்தது. “மூவர் கோனாய் நின்ற முதல்வன்” (சதக) என மாணிக்கவாசகர் கூறுவர். சிவனை யுள்கிச் சிந்தைக்கண் நேர்பட நின்று வழுத்த வேண்டுதலின், அவ்வாறு செய்யாதவரைக் கடையரென்று ஒதுக்கி, “உள்கி நின்று ஏத்தாக் கடையர்” என்று உரைக்கின்றார். கயவராய்க் கீழ்மைக்கண் பன்னாள் கிடப்பவரைப் “பழைய கயவர்” என்று பகர்கின்றார். புரட்டு, சொல்லும் செயலும் மாறுபடப் பேசுதல்; வஞ்சித்தலுமாம். அச் செயலில் மிக்கவரைப் “புரட்டுக் கடியர்” என்றும், குற்றம் மிகச்செய்து கடியப்படுபவரைக் “கடியர்” என்றும் கூறுகின்றார். கலகம் செய்து திரிவதே செயலாக வுடையவரை, “கலக நடையர்” எனவும், உலகியல் வாழ்வில் நுகரப்படும் சிற்றின்பத்தையே மிகவும் விரும்புபவரை, “உலக நசையர்” எனவும் இயம்புகின்றார்.
இதனால், இறைவனை உள்கி நின்று ஏத்தாக் கடையர் முதலாயினரைக் கண்டால் மனம் கூசுமாறு கூறுகின்றார். (6)
|