904. கஞ்சனைச் சிரங்கொய் கரத்தனை மூன்று
கண்ணனைக் கண்ணனைக் காத்த
தஞ்சனை ஒற்றித் தலத்தனைச் சைவத்
தலைவனைத் தாழ்ந்துநின் றேத்தா
வஞ்சரைக் கடைய மடையரைக் காம
மனத்தரைச் சினத்தரை வலிய
நஞ்சரை இழிந்த நரகரைக் கண்டால்
நடுங்குவ நடுங்குவ மனமே.
உரை: பிரமனைத் தலையை யரிந்த கையை யுடையவனும், மூன்றாகிய கண்களை யுடையவனும், கரியனாகிய திருமாலைச் சக்கரப்படை தந்து ஆதரித்து தஞ்சனும், திருவொற்றியூராகிய தலத்தை யுடையவனும், சைவநெறிக்குத் தலைவனுமாகிய சிவனைப் பணிந்து நின்று பரவாத வஞ்சகரையும், கடைப்பட்ட மடையரையும், காம வுணர்ச்சி மிக்க மனமுடையவரையும், சின முடையவரையும், வலிய நஞ்சம் போன்றவரையும், இழிந்த நரகம் புகுதற்குரிய பாவிகளையும் காண நேர்ந்தால், மன முதலாகிய கரணத் தொகுதிகள் மிகவும் நடுங்குகின்றன. எ.று.
கஞ்சம் தாமரையாதலின், கஞ்சனென்பது தாமரைப் பூவிலிருக்கும் பிரமனுக்காயிற்று. கண்ணன், கரிய நிறமுடையவன்; ஈண்டு இப் பெயர் திருமாலுக்காயிற்று. பகைவரை யழித்தற்பொருட்டுத் தஞ்சம் என்று சிவனையடைந்து ஆயிரம் பூச்சொரிந்து திருமால் வழிபட்டுச் சக்கரப்படை அளிக்கப்பெற்ற வரலாறு கருதி, “கண்ணனைக் காத்த தஞ்சன்” என்று இசைக்கின்றார். தஞ்சன், ஈண்டு புகலாயவன் என்ற பொருளில் வந்தது. சைவ நெறிக்குச் சிவனே தலைவனாதலால், “சைவத் தலைவன்” என்று சாற்றுகின்றார். “சைவப் பெருமைத் தனிநாயகன்” (1559) என்று திருமந்திரம் கூறுவது காண்க. “தாழ்வெனும் தன்மை சைவ நெறிக்கு இன்றியமையா வியல்பாதலின், “தாழ்ந்து நின்று” ஏத்துதலை வற்புறுத்துகின்றார். “தாழ்வெனும் தன்மையோடு சைவமாம் சமயம் சாரும் ஊழ்பெறல் அரிது” (சிவ. சித்தி) என்று அருணந்தி சிவனார் அறிவிக்கின்றார். மடமை யடியாகத் தோன்றும் மடவர் என்னும் சொல் ‘மடையர்’ என மருவி வந்துள்ளது. மடவருள்ளும் கடையானவ ரென்றற்குக் “கடைய மடையர்” என்று கூறுகின்றார். மடையர் என்ற இயற்சொல் சோறாக்குபவரைக் குறிக்கும்; மடைப்பள்ளிகளில் இருந்து பணிபுரிபவர் மடையர் என்க. காமவிச்சை நிறைந்த மனமுடையாரைக் “காம மனத்தர்” என்று குறிக்கின்றார். சிறு தவறு காணினும் பொறாது வெகுள்பவரைச் “சினத்தர்” எனக் கூறுகின்றார். மணிமந்திர மருந்துகளால் தீராத வன்மைமிக்க நஞ்சு போன்று சொல்லும் செயலையுடைய தீயவர்களை “வலிய நஞ்சர்” என்று வரைந் துரைக்கின்றார். நரகத்திற் புக்குழலுதற்குரிய பாவம் செய்தவரை “நரகர்” என்றும், நரகம் “இழிந்த” இயல்பிற்றாதலின் “இழிந்த நரகர்” என்றும் இயம்புகின்றார்.
இதனால், தாழ்வெனும் தன்மையுடன் சிவனை யேத்தாதவரைக் கண்டால் கரணங்கள் நடுங்குமாறு கூறியவாறாம். (7)
|