905. தாமனை மழுமான் தரித்தசெங் கரனைத்
தகையனைச் சங்கரன் தன்னைச்
சேமனை ஒற்றித் தியாகனைச் சிவனைத்
தேவனைத் தேர்ந்துநின் றேத்தா
ஊமரை நீண்ட ஒதியரைப் புதிய
ஒட்டரைத் துட்டரைப் பகைகொள்
நாமரை நரக நாடரைக் கண்டால்
நடுங்குவ நடுங்குவ மனமே.
உரை: சிவ சூரியனும், மழுவும் மானும் ஏந்திய செங்கைகளையுடையவனும், அழகனும், சங்கரனும், சேமனும், திருவொற்றியூர்த் தியாகப்பெருமானும், சிவனும், தேவனுமாகிய பரமனை முதல்வனெனத் தேர்ந்தறிந்து பரவாத ஊமர்களையும், நீண்ட ஒதிமரம் போன்ற பயனற்றவர்களையும், புதுமை சான்ற ஒட்டர்களையும், துட்டர்களையும், பகைமையால் அச்சம் செய்பவரையும், நரகம் புகுதற்குரிய தீவினையாளரையும் காண நேர்ந்தால் மன முதலிய கரணங்கள் மிகவும் நடுங்கும். எ.று.
தாமன் - சூரியன்; ஆன்மாவின்கண் கலந்து ஒன்றியிருக்கும் மலவிருளைக் கடியும் அருளொளி திகழ்வதுபற்றிப் பரசிவத்தைச் சிவ சூரியன் என்பர். மழுமான் - உம்மைத் தொகை. எப்போதும் யார்க்கும் செம்மையே புரியும் கையில் மழுவும் மானும் ஏந்துதலின் “மழுமான் தரித்த செங்கரன்” என்றும், சுகத்தையே செய்பவன் என்பதுபற்றிச் “சங்கரன்” என்றும் இசைக்கின்றார். தகை - அழகு. எருதேறும் செல்வன் என்பது விளங்க, “சேமன்” என்கிறார். சேமன் என்பது சிவனுக்குரிய பெயர்களுள் சிறப்புடையதாகக் கருதிப் பண்டைச் செல்வ மக்கள் தம் புதல்வர்க்குப் பெயரிட்டுள்ளனர். சித்திரன் சேமன் என்ற சபைக் கணக்கனும் (புதுக். கல். 350), அழகிய சேமவேளான் என்ற கோயிற்கண்காணிக் கணக்கனும் (புதுக். 432) இப்பெயர் தாங்கியிருப்பதைப் பார்க்கின்றோம். சேமன் என்ற இப்பெயர் எவ்வுலகத் தெவ்வுயிர்க்கும் காப்பாயவன் என்ற பொருளும் தருதலின், இஃது அந்நாளில் மக்களிடையே நன்கு பேணப்பட்டது போலும். தேவர்களில் ஒருவனாய்த் தோன்றி அவர்கட்கு அரசும் அருளும் புரிவதால், “தேவன்” என்று கூறுகிறார். இவ்வாறு சிவனாயும் தேவனாயும் கூறப் படுவது கண்டு, தேவர்களில் ஒருவனாகக் கொள்ளாமல் “தேவ தேவனாகிய முதல்வன்” எனத் தேர்ந்து வழிபடுவது செந்நெறி; அது செய்யாதார் இழிக்கப்படும் திறத்தைத் “தேர்ந்து நின்று ஏத்தா ஊமர்” என்று இயம்புகின்றார். பேசும் நலமுடைய வாய்ப்பிருந்தும் சிவன் புகழைச் சொல்லி ஏத்தாமையால், “ஊமர்” என்கின்றார். நெடிதுயர்ந்து வளரும் இயல்பினதாயினும் காழ்ப்பின்றி எளிதில் வீழ்ந்துபடுவது ஒதி மரம்; அதுபோல் ஞானவுரமாகிய உள்ளீடில்லாத மக்களை, “நீண்ட ஒதியர்” என இகழ்கின்றார். ஒட்டர், குறிப்பு மொழியாய் நண்பால் ஒட்டுதல் இல்லாத பகைவர் மேலதாம். இடைக்காலத்தே தென்னாட்டிற் புகுந்து தீங்கு செய்த ஒட்டியர் (175/1906; கல். P.S. 763) கூட்டத்தைச் சேர்ந்தவரென்றும் கூறுவர். துட்டர் - தீது செய்யும் இயல்பினர்; வடசொற் சிதைவு. அச்சப் பொருளுணர்த்தும் உரிச்சொல்லாகிய நாம் என்பதன் அடியாக வந்தது, நாமர் (தொல். சொல். உரி. 67). நரக தண்டனைக் குள்ளாவோர் இருக்கும் நாடு, நரக நாடு; இது நமதுலகில் ஒரு கூறு எனப் புராணிகர் கூறுவர்.
இதனால், சிவனைத் தேர்ந்து நின்று ஏத்தாத ஊமர் முதலாயினாரைக் கண்டால் அந்தக் கரணங்கள் நடுங்குதல் கூறியவாறு. (8)
|