906.

     ஈசனைத் தாயில் இனியனை ஒற்றி
          இன்பனை அன்பனை அழியாத்
     தேசனை ஒற்றித் தலைமைத் தேவனை ஞானச்
          சிறப்பனைச் சேர்த்துநின் றேத்தா
     நீசரை நாண்இல் நெட்டரை நரக
          நேயரைத் தீயரைத் தரும
     நாசரை ஒழியா நட்டரைக் கண்டால்
          நடுங்குவ நடுங்குவ மனமே.

உரை:

     ஈசனும், தாய்போல் இனியவனும், திருவொற்றியூரில் வீற்றிருக்கும் இன்பனும், அன்பனும், குன்றாத ஒளி படைத்தவனும், தலைமை சான்ற தேவனும், சிவஞானச் சிறப்புடையவனுமாகிய சிவ பெருமானை அடியாருடன் கூடி நின்று ஏத்துதல் செய்யா நீசரையும், நாணமில்லாத நெட்டர்களையும், நரக வாழ்வுக்குரிய செயல்களை விரும்புபவர்களையும், தீயவர்களையும், தருமத்தை நாசம் செய்பவர்களையும், நீங்காமல் நட்டமே விளைவிப்பவரையும் காணநேர்ந்தால் மன முதலிய கரணங்கள் மிகவும் கூசுகின்றன. எ.று.

     ஈசன் - செல்வன்; அஃதாவது அருட் செல்வன், தாயிற் சிறந்த தயா வுடையவனாதலால் “தாயில் இனியன்” என்று பாராட்டுகின்றார். “தாயினும் நல்ல சங்கரன்” (ஆதிபு) என்று திருநாவுக்கரசர் தெரிவிப்ப, ஞான சம்பந்தர், “தாயினும் நல்ல தலைவர் என்று அடியார் தம் மடி போற்றிசைப்பார்கள், வாயினும் மனத்தும் மருவி நின்றகலா மாண்பினர்” (திருக்கோண) என்று புகழ்வது காண்க. இல், ஒப்புப் பொருட்டு, ஒற்றியூர்க்கண் இருந்து அடி பணிந்து பரவுவோர்க்கு இன்பம் அளிப்பதுபற்றி, “ஒற்றியின்பன்” என வுரைக்கின்றார். அன்பே வடிவாதலின், அன்பன் என்றல் வேண்டுவதாயிற்று. சிவன் திருமேனி ஞானப் பேரொளி திகழ்வதுபற்றி, “அழியாத் தேசன்” என்று மொழிகின்றார். தேசு - ஒளி. ஒளியுடைய உலகியற் பொருளனைத்தும் நிலையுடையவல்லவாதலாலும், “ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதி” என மாணிக்கவாசகர் கண்டுரைத்தலாலும், சிவனை, “அழியாத் தேசன்” என்று வள்ளலார் இயம்புகின்றார். தேவர்கட்கும் எட்டாத தனித்தலைமைத் தேவனாதலால், “தலைமைத் தேவன்” என்று கூறுகிறார். “யாதோர் தேவர் எனப்படுவார்க்கெல்லாம், மகாதேவனல்லால் தேவர் மற்றில்லையே” (ஆதிபுரா) என அப்பமூர்த்திகள் தெளியவுரைத்தலால் வள்ளற்பெருமான் இவ்வாறு கூறுகின்றார். ஞானத்தால் ஞானிகள் தொழுது பரவும் ஞானமூர்த்தியாதலின், சிவனை “ஞானச்சிறப்பன்” என்று தெரிவிக்கின்றார். “ஞானத்தால் தொழுவார் சிவஞானிகள், ஞானத்தால் தொழுவேன் உனை நானலேன், ஞானத்தால் தொழுவார்கள் தொழக்கண்டு, ஞானத்தால் உனை நானும் தொழுவனே” (தனி. குறு.) என நாவுக்கரசர் உரைப்பதறிக. வேதங்களும் இதிகாச புராணங்களும் எத்தனையோ பல தெய்வங்கட்குத் தலைமை தந்து பாட்டாலும் உரையாலும் கலக்கம் விளைவித்தலின், சிவனது பரமாநதன்மையை உணர்ந்தாலன்றி வழிபடற்கு நெஞ்சு ஒன்றாமையால் தேர்ந்து ஒன்றி நின்று ஏத்துதல் நெறியாகும்; அது செய்யாதவர் மக்களினத்துக் கடைப்பட்டவர் என்பார், “தேர்ந்து நின்று ஏத்தா நீசர்” என்று கூறுகின்றார். நெடிது வளர்ந்தாரை “நெட்டர்” என்றும், நெட்டைய ரென்றும் உலகர் வழங்குவர். வளர்ச்சியில் நெடுமை மாத்திரமே கொண்டு நாண் இலராயினார் என்றற்கு “நாணில் நெட்டர்” என்று கூறுகிறார். நெடிதுயர்ந்த உடற்கேற்ப நன்பொருளறிந் தொழுகும் நற்பண்பு இல்லாமை நாணுத் தருவதாக, அதனை உள்ளத்திற் கொள்ளாமை யுடையராயினாரை, “நாணமில் நெட்டர்” எனப் பழிக்கின்றார். நன்பொருளாவது, சிவனது பரமாந் தன்மையை அறிவது. உணர்தற்குரியதனை யுணராது தீய செய்து நரகம் புகுதற்குரிய பாவத்தை ஈட்டுகின்றாரை, “நரக நேயர்” எனக் குறிக்கின்றார். இவ்வுலகிலேயே துன்புறுதற்குரிய குற்றம்புரிபவரைத், “தீயர்” எனவும், அறம் செய்யாமையே யன்றிச் செய்யப்படும் அறத்தையும் அழிப்பவரைத், “தரும நாசர்” எனவும், செய்வினைக்கண் நட்டமெய்தியவழிக் கையொழியாது அதனையே மீள மீளச் செய்து கெடுவாரை, “ஒழியா நட்டர்” எனவும் உரைக்கின்றார்.

     இதனால், சிவனைத் தேர்ந்து நின்றேத்தா நீசர் முதலாயினாரைக் காண நேர்ந்தால் மன முதலிய கரணம் வருந்துவது கூறியவாறாம்.

     (9)