907. நித்தனைத் தூய நிமலனைப் புலியூர்
நிருத்தனை ஒருத்தனை வாய்மைச்
சுத்தனை ஒற்றித் தலம்வளர் ஞான
சுகத்தனைச் சூழ்ந்துநின் றேத்தா
மத்தரைச் சமண வாதரைத் தேர
வறியரை முறியரை வைண
நத்தரைச் சுணங்க நாவரைக் கண்டால்
நடுங்குவ நடுங்குவ மனமே.
உரை: நித்தனும், தூய நிமலனும், தில்லைப் பெரும்பற்றப் புலியூரில் மன்றில் ஆடும் நிருத்தனும், ஒருத்தனும், வாய்மையாற் சுத்தனும், திருவொற்றியூராகிய தலத்தின்கண் மேவும் ஞான சுகவடி வினனுமாகிய சிவபெருமானை நேர்பட நினைந்து நின்று ஏத்துதல் செய்யாத மத்தம் கொண்டவரையும், சமண்நெறி மேற்கொண்டு வாதம் புரிபவரையும், தேர சமய நெறியில் நிற்கும் அறிவிலாரையும், அடிமை மனத்தரையும், வைணராகிய இருள் மனத்தரையும், நாய் போற் குரைக்கும் நாவுடையவரையும் காண நேர்ந்தால் மன முதலிய கரணங்கள் மிகவும் நடுங்குகின்றன. எ.று.
நித்தன் - என்றும் உள்ளவன். நிமலன் - மலமில்லாதவன். தான் மலமில்லனாய் மலமுடைய பிற வுயிர்களோடு கலந்தொழுகினும் அதனாற் பற்றப்படாமை பற்றித் “தூய நிமலன்” என்று கூறுகிறார். தில்லையில் கூத்தப்பெருமான் திருக்கோயில் திருமூலட்டானச் சன்னிதி புலியூர் என இன்றும் வழங்குகிறது. நிருத்தன் - தில்லையம்பலத்தில் ஆடுபவன் மாதொரு பாகனாயினும், திருமேனி இரண்டாகாது ஒன்றாதலின், “ஒருத்தன்” என்கின்றார். “நீலமேனி வாலிழை பாகத் தொருவன்” என்பர் பாரதம் பாடிய பெருந்தேவனார். “இணங்கு மலைமகளோடிருகூறொன்றாய் இயைந்தார்” என ஞானசம்பந்தர் கூறுவர். மக்களது மனத் தூய்மை காட்டற்கமைந்தது வாய்மை; அது செய்தற்குரிய ஆற்றலை யதற்குத்தரும் தூயனாதலால், சிவனை “வாய்மைச் சுத்தன்” என்று சிறப்பிக்கின்றார். “வாய்மையால் தூயே னல்லன்” (புகலூர்) என்று திருநாவுக்கரசர் கூறுவது காண்க. திருவொற்றியூர்க்கண் சிவாகம ஞானப்பொருளை விழைவார்க்கு விளக்கி யுரைத்தது, அங்குள்ள கல் வெட்டுக்களால் “வியாக்கியான மண்டபம்” என்ற பெயரால் தெரிகிறபடியால், “ஒற்றித் தலம் வளர் ஞான சுகத்தன்” என்று குறிக்கின்றார். மண், பொன், பெண் என்ற மூன்றாலும் உண்டாகும் சுகத்தினும், சிவஞானம் நல்கும் சுகம் சிறந்தமையின் “ஞான சுகத்தன்” எனப் புகழ்கின்றார். ஞானமூர்த்தியைச் சிந்தைக்கண் வைத்துப் பரவுதல் முறைமையாதலால் “சூழ்ந்து நின்று ஏத்தல் வேண்டும்” என்று அறிவிக்கின்றார். மனத்தின் கண் தெளிவின்றிப் பித்துற்றார் அவ்வாறு ஏத்தாரென்றற்கு “சூழ்ந்து நின்று ஏத்தா மத்தர்” என்று இசைக்கின்றார். மத்தர், பித்தேறியவர்; அவர்களை உன்மத்த ரென்பதும் வழக்கு. “மனவாசகம் கடந்தான் எனைமத் தோன் மத்தனாக்கி” (உயிருண்ணி) என மணிவாசகர் கூறுவர். சமண வாதர் - சமண் சமயம் மேற்கொண்டு வாதம் புரிவதே பெருந் தொழிலாக வுள்ளவர். “வாது செய் சமண்” (அச்சிறு) என ஞான சம்பந்தர் கூறுகின்றார். சமண ஆதர் எனக்கொண்டு, சமண் சமயத்து அறிவிலிகள், குருடர் என்பது முண்டு. ஆதர் - அறிவில்லாதவர். “முன் பொருள் செய்யாதார் ஆதரே” (சிறுபஞ்ச. 20) என்பது காண்க. தேரர் - பௌத்தர்; இவர்களை ஸ்தவிரவாதிகள் என்றும் கூறுவர். முறியர் - அடிமைகள்; தமக்கென அறிவின்றிப் பிறர் சொல்லுவன கேட்டுச் செய்பவர். வைண நத்தர் - வைணவ சமயத்து ஓரிரு நூற் பொருளன்றிப் பரந்துபட்ட பற்பல சமய நூற்கேள்வியால் விளக்கம் பெறாமல் மனம் இருண்டு கிடப்பவர். நத்தம் - இருளைக் குறித்தலால், நத்தர் இருளிலிருப்பவ ரென்றாயிற்று. சுணங்கன் - நாய். நாய்போற் குரைத்து இரைச்சலிட்டுப் பேசுபவரைச் “சுணங்க நாவர்” என்று சொல்லுகிறார். இப் பத்தின்கண் “நடுங்குவ நடுங்குவ மனமே” என்பதற்கு இலக்கணவமைதி கண்டோர், “ஒருமைப் பன்மை மயக்கம், உபலக்கணத்தான் அமைந்ததென்க; இதனை விரிக்கிற் பெருகும்; அல்லதூஉம் ஒருமையிற் பன்மையும் பன்மையின் ஒருமையும் மயங்கி வந்தது என்பதூஉம் ஒன்று; ஒன்றறி யீறு கெட்டு நின்றதெனக் கொள்ளுநர் கொள்க” என்று கூறுகின்றார். (பாலகி. பதிப்பு. அனுபந்தம்.)
இதனால், சிவனைச் சூழ்ந்து நின்றேத்தா மத்தர் முதலாயினாரைக் காண நேர்ந்தால் மன முதலிய கரணங்கள் மிகவும் நடுங்கும் திறம் கூறியவாறாம். (10)
|