909.

     புகழே விரும்பிப் புலன்இழந்தேன்
          போந்துன் பதத்தைப் போற்றுகிலேன்
     இகழேன் எனைநான் ஒற்றிஅப்பா
          என்னை மதித்தேன் இருள்மனத்தேன்
     திகழ்ஏழ் உலகில் எனைப்போல்ஓர்
          சிறியர் அறியேன் தீவினையை
     அகழேன் எனினும் எனையாளா
          தகற்றல் அருளுக் கழகன்றே.

உரை:

     திருவொற்றியூர் அப்பனே, உலக வாழ்விற் பெறலாகும் புகழை விரும்பி நின் திருவருளுண்மை யறியும் அறிவிழந்தமையால், திருமுன் போந்து நின் திருவடியைப் போற்றுகின்றே னில்லை; என் செயலை யுணர்ந்து என்னையே நான் இகழ்கின்றேனுமில்லை; அறியாமையால் இருண்ட மனமுடையனாதலின், என்னை நான் பெரும்பொருளாக மதித் தொழிந்தேன்; விளங்குகின்ற உலகுகள் ஏழினும் என்போலும் சிறுமையுடையார் ஒருவரையும் அறியேன்; அதனால், எனது தீவினைகளை உணர்ந்து வேரொடு அகழ்ந்தெறியாமல் இருக்கின்றேன்; இத்தன்மையனாயினும் என்னை அருளாது விலக்குவது நின் திருவருளுக்கு அழகாகாது காண். எ.று.

     உலகம் பொன்றுவதாயினும், அது பொன்றுங்காறும் புகழ் பொன்றுவதில்லை யென்பதுபற்றி, அதனையே மிகவும் விரும்பி அது பெறற்குரியன செய்தொழிந்தேனே யன்றி, உலகனைத்தையும் ஆண்டருள்வது நின் திருவருள் என்னும் உண்மையை யுணரும் உணர்வை இழந்தொழிந்தேன் என்பார் “புகழே விரும்பிப் புலன் இழந்தேன்” என்றும், உணர்வு தோன்றியதும் நின்பாற் போந்து நின் திருவடியைப் போற்றும் கடமை யுடையேனாகிய யான் அது செய்யவில்லை என்பாராய்ப் “போந்து உன் பதத்தைப் போற்றுகிலேன்” என்றும், போற்றாமையே யன்றி அத்தவறு நோக்கி யென்னை யானே இகழ்ந்து நோவதை விடுத்து, என்னை நானே பெரிய பொருளாக எண்ணிக் கெட்டேன் என்று வருந்துவாராய் “இகழேன் எனைநான், என்னை மதித்தேன்” என்றும், இவற்றிற்கெல்லாம் என் மனத்திற் படிந்திருக்கும் இருளன்றிப் பிறிதில்லை என்பது குறிப்பாய் விளங்க “இருள் மனத்தேன்” என்றும் உரைக்கின்றார். மனவிருளால் தாம் எய்திய சிறுமையை நினைக்கின்ற வள்ளலார், “திகழ் ஏழ் உலகில் எனைப்போல் ஓர் சிறியர் அறியேன்” எனவும், இவ்விருட்குக் காரணம் யான் செய்த தீவினை; அதனை வேரொடு களையா தொழிந்தேன் என்று நொந்து கொள்பவர் “தீவினையை அகழேன்” எனவும் இயம்புகின்றார். வினை இருள் விளைவிக்கும் என்பதை “வினையால் அசத்து விளைதலால் ஞானம் வினை தீரினின்றி விளையாவாம்” (சிவ. போ.) என மெய்கண்ட தேவர் விளம்புவது அறிக. வினை நீக்கமும் ஞானப்பேறும் நின் திருவருளா லல்லது இல்லையாதலால், என்னைக் குற்றம் பற்றிககைவிடாது அருளுக என்று வேண்டுவாராய், “எனினும் அருளாதகற்றல் அருளுக் கழகன்று” என முறையிடுகின்றார்.

     இதனால், அருள் விரும்பாது என்னையே மதித்துத் தீவினையை அகழா தொழிந்த குற்றம் நோக்கி கைவிடாதருளல் வேண்டுமென்பதாம்.

     (2)