91.

    அன்னே யப்பா எனநின்றாட்
        கார்வம் கூர்ந்திங் கலைகின்றேன்
    என்னே சற்றும் இரங்கிலை நீ
        என்னெஞ் சேரநின் னன்னெஞ்சம்
    மன்னே யொளிகொள் மாணிக்க
        மணியே குணப் பொன்மலையே நல்
    தென்னேர் பொழில்சூழ் திருத்தணிகைத்
        தேவே ஞானச் செழுஞ்சுடரே.

உரை:

     நல்ல அழகிய சோலை சூழ்ந்த திருத்தணிகைப் பதியில் எழுந்தருளும் தெய்வமே, ஞானச் செழுஞ்சுடரே, மன்னனே, ஒளி கொண்ட மாணிக்க மணி போல்பவனே, குணமே நிறைந்த பொன் மலையே, ‘அம்மையே அப்பா’ என்று வாயாற் சொல்லி உள்ளத்தை அன்பு மிக்கெழுதலால் ஒருவழியும் நில்லாது அலைகின்றேன்; என்னைக்கண்டும் சிறிதும் இரங்குகின்றாயில்லை; நின்னுடைய நல்ல நெஞ்சம் எத்தகையதோ, தெரியேன், எ. று.

     தென் - அழகு. மாறா இயற்கை யழகாற் பொலிதலின், “நல்தென்னேர் பொழில்” எனச் சிறப்பிக்கின்றார். என்றுமுள்ள பரம் பொருளாதலால், “மன்னே” எனவும், தெய்வ வொளி கொண்ட மாணிக்கமணி போறலின், “ஒளி கொள் மாணிக்க மணியே” என்றும், குணக குன்றாய்ப் பொன்னிறத்ததாய் மேன்மை யுறுதலால், “குணப் பொன்மலையே” என்றும் பரவுகின்றார். திருவடிக்கண் அன்பு மிகுந்து அம்மையே அப்பா என்று அழைத்துத் திரியுமாறு புலப்பட, “அன்னே அப்பா என நின்தாட்கு ஆர்வம் கூர்ந்து இங்கு அலைகின்றேன்” என்றும், திருவருட் பேறு நினைந்தபடி எய்தாமை தோன்ற, “என்னே சற்றும் இரங்கிலைநீ” என்றும், நின்னுடைய அருள் மிக்க நெஞ்சத்து எண்ணம் அறிகிலேன் என்பார், “என் நெஞ்சோ நின் நன்னெஞ்சம்” என்றும் இயம்புகின்றார்.

     இதனால் திருவருட் பேறு விரைந்து எய்தாமைக் கேதுவாகிய எண்ணம் யாதோ என முறையிட்டவாறாம்.

     (10)