910. அன்றும் அறியார் மாதவரும்
அயனும் மாலும் நின்நிலையை
இன்றும் அறியார் அன்றியவர்
என்றும் அறியார் என்னில்ஒரு
நன்றும் அறியேன் நாயடியேன்
நான்எப் படிதான் அறிவேனோ
ஒன்றும் நெறிஏ தொற்றிஅப்பா
ஒப்பார் இல்லா உத்தமனே.
உரை: திருவொற்றியூர் அப்பனே, ஒப்பாக ஒருவருமில்லாத உத்தமனே, பெரிய தவமுடைய முனிவர்களும், பிரமன் திருமாலாகிய தேவர்களும் நினது பரமாம் நிலைமையை அன்றும் அறிந்திலர், இன்றும் அறிகின்றிலர், என்றும் அறிவாரல்லர் என நூலோர் உரைப்பரென்றால், நின்னுடைய நலங்களில் ஒன்றும் அறியாத நாயடியேனாகிய நான் அறிவது எவ்வாறோ? நின் திருவருட் செந்நெறிக்கண் அடியேன் ஒன்றி நிற்கும் வழியறியேன்; காட்டியருள்க. எ.று.
மாதவர் - பெரிய தவம் செய்துயர்ந்த முனிவர். மக்கட் பிறப்பில் தவத்தால் உயர்ந்ததன்றிச் சிவஞான வடிவுற்றுச் சிவமாந் தன்மை எய்தாமையின் “மாதவர்கள் என்றும் அறியார்” என வுரைக்கின்றார். சிவஞானம் அவர்கட் கெய்தா துயர்ந்த பொருளென்பதைச் சேக்கிழாரடிகள், “தேவருக்கும் முனிவருக்கும் தெரிவரிய பொருளாகும் தாவில் தனிச்சிவஞானம்” (ஞானசம். 69) என உரைப்பது காண்க. பெருமையுடைய தேவராகியும் பேதைமை தீரா வுளத்தரானமையின் “அயனும் மாலும் நின் நிலையை என்றும் அறியார்” என்று உரைக்கின்றார். “பிரமனும் மாலும் பிரானே நான் என்னப் பிரமன் மால் தங்கள் பேதைமையாலே” (திருமந். 372) எனத் திருமூலர் கூறுவது சான்றாம். “அன்றும் அறியார் இன்றும் அறியார்” எனவே, “என்றும் அறியார்” என்பது துணியப்பட்டது. என்னில் என்பது, என்று சொல்வார்களாயின் எனப் பொருள் படுதலான், சொல்வோராகிய “நூலோர்” என்பது வருவிக்கப்பட்டது. நாயடியேன் - நாய்போற் கடைப்பட்ட அடியவன். “தித்திக்கும் சிவபதத்தை அருத்தியினால் நாயடியேன் அணிகொள் தில்லை கண்டனே” (கண்ட) என்று மணிவாசகப்பெருமான் வழங்குவது காண்க. “நாயிற் கடைப்பட்ட நம்மை” (பொற். சுண்.) என்பது கொண்டு இவ்வாறு பொருள் கொள்ளப்பட்டது. “ஒன்றியிருந்து நினைமின்கள் உந்தமக் கூனமில்லை” என நாவுக்கரசர் அறிவுறுத்தலால், சிவனது நலமறிதற்கு ஒன்றும் நெறி யறிதலை விரும்பி, “ஒன்றும் நெறி எது” என வள்ளலார் வேண்டுகின்றார். “காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே” எனவும், “அவனருளாலே அவன் தாள் வணங்கி” எனவும் சான்றோர் உரைத்தலால், ஒன்றும் நெறியும் யாதென இறைவனை வேண்டிப் பெறற்குரியதாகிறது. காட்டியருள்க என்பது குறிப்பெச்சம்.
இதனால், சிவனுடைய நலமறியும் பொருட்டு ஒன்றும் நெறியாதென்று உணர்த்த விண்ணப்பித்தவாறாம். (3)
|