911.

     ஒப்பார் இல்லா ஒற்றிஅப்பா
          உன்னை மறந்தேன் மாதர்கள்தம்
     வெப்பார் குழியில் கண்மூடி
          விழுந்தேன் எழுந்தும் விரைகின்றேன்
     இப்பார் நடையில் களித்தவரை
          ஈர்த்துக் கொடுபோய்ச் செக்கிலிடு
     விப்பார் நமனார் என்பதைநான்
          நினையா தறிவை விடுத்தேனே.

உரை:

     திருவொற்றியூரி லிருக்கும் ஒப்பொருவரு மில்லாத அப்பனே! உன்னை மறந்து மகளிர் முயக்கமாகிய வெப்பம் பொருந்திய குழியில் கண்மூடித்தனமாய் விழுந்தெழுந்து மேன்மேலும் வீழ்தற்கே விரைகின்றேன்; இவ்வுலக நடை நல்கும் இன்பத்திற் களித்துக் கிடப்பவரைச் செத்தபோது நமன் ஈர்த்துக்கொண்டு சென்று நரகில் செக்கிலிட்டு வருத்துவன் என்று புராணிகர் சொல்லுவதை நினைவிற் கொள்ளாது நல்லறிவைக் கைவிட்டேன்; என்னை அருளுக. எ.று.

     என்னை அருளுக என்பது, குறிப்பெச்சம். பரம்பொருளாகிய நினது உண்மையையும் நீ அருள் வழங்கும் திறத்தையும் நூல்களாலும் அறிந்தோர் சொற்களாலும் அறிந்தும் நின்னை மறந்தேன் என்பார், “ஒப்பார் இல்லா ஒற்றியப்பா உன்னை மறந்தேன்” என்று உரைக்கின்றார். மறதிக்குக் காரணம் காம மயக்கம் என்பார், காம நுகர்ச்சி மேல் வைத்து, “மாதர்கள் தம் வெப்பார் குழியில் கண்மூடி விழுந்தேன் எழுந்தும் விரைகின்றேன்” என மொழிகின்றார். காமப் புணரியலை “மாதர்கள் தம் வெப்பார் குழியில் விழுந்தேன்” என்றும், அப்புணர்ச்சி புணருந்தொறும் புத்தின்பம் தந்து அறிவை மயக்குமாறு புலப்பட “விழுந்தேன் எழுந்தும் விரைகின்றேன்” என்றும் கூறுகின்றார். வெப்பார் குழி யென்றது மகளிரது வெப்பம் பொருந்திய பெண்ணுறுப்பை யென்க. விரைதல் - ஆத்திரப்படுதல். “வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன்” (சதக) எனத் திருவாசகம் ஓதுவது காண்க. இப்பார் நடை - இவ்வுலகியல் வாழ்வு. இவ்வுலக வாழ்வு நல்கும் இன்பத்தையே உயிர் வாழ்வுக்கு முதலும் முடிவுமென மயங்கி அதன்கண் அழுந்திக் கிடப்பவரை, “இப்பார நடையிற் களித்தவர்” எனக் குறிக்கின்றார். இவ்வுலக நடை மகளிர்பாற் பெறலாகும் காம வின்பமே பெரிதெனக் காட்டி அதற்குரிய நன்றும் தீதுமாகிய இருவகை நெறியிலே மக்களைச் செலுத்தும் இயல்பினதென அறிக. பார் நடையிற் களிப்பவர் தீநெறியைப் பெரிதும் மேற்கொண்டு ஒழுகுதலால் அவர் நரகத்தில் நமன் தமரால் துன்புறுத்தப்படுவர் எனப் பௌராணிகம் சொல்வதை மேற்கொண்டு “இப்பார் நடையிற் களித்த வரை ஈர்த்துக் கொடுபோய்ச் செக்கிலிடுவிப்பார் நமனார் என்பதை நான் நினையாது அறிவை விடுத்தேன்” எனத் தெரிவிக்கின்றார். கொடு : இடைக்குறை. அறிவை விடாத வழி நினைவு நீங்காதாகலின், “நினையாது அறிவை விடுத்தேன்” என்று அவலிக்கின்றார்.

     இதனால், உலக நடையிற் களித்த வழி யுளதாகும் நரகத் துன்பத்தை மறந்து அறிவைக் கைவிட்டு மகளிர் முயக்கில் விழுந்த என்னைப் பொறுத்து அருளுக என வேண்டியவாறாம்.

     (4)