912. விடுத்தேன் தவத்தோர் நெறிதன்னை
வியந்தேன் உலக வெந்நெறியை
மடுத்தேன் துன்ப வாரிதனை
வஞ்ச மனத்தர் மாட்டுறவை
அடுத்தேன் ஒற்றி அப்பாஉன்
அடியை நினையேன் அலமந்தேன்
படுத்தே நமன்செக் கிடும்போது
படிறேன் யாது படுவேனோ.
உரை: ஒற்றியப்பா! தவத்தோருடைய நெறியை மேற்கொள்ளாமல், உலக வெவ்விய நெறியை வியந்து மேற்கொண்டு, துன்பமாகிய கடலுள் வீழ்ந்து, வஞ்சம் பொருந்திய மனமுடையாருடைய உறவைப் பெற்றேன்; நின்னுடைய திருவடியை நினையாமல் உலகியலிற் சுழல்கின்றேன்; இறக்கும் நாளில் நமன்பற்றி நரகிற் புகுத்திச் செக்கிலிட்டு வருத்தும்போது, படிறுடையேனாகிய யான் என்ன துன்பம் உறுவேனோ, அறியேன். எ.று.
தவத்தோருடைய நெறியென்பது தவநெறி; தவமாவது “உற்ற நோய் தோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை” (குறள்) என்பர் திருவள்ளுவர். சரியை முதலாக வுரைக்கும் நான்கினையும் தவமென்பர் மாதவச் சிவஞான முனிவர். இவற்றைக் கைக்கொள்ளாதொழிந்தேன் என்றற்கு “விடுத்தேன்” என விளம்புகின்றார். உலக நெறி பிறவி வெம்மைக்கு ஏதுவாதல் பற்றி, உலக வெந்நெறி எனப்படுகிறது. வெம்மை, ஈண்டுத் துன்பம் குறித்து நின்றது. வியத்தல் - மகிழ்ந்து ஏற்றல்; விரும்புதலுமாம். துன்பவாரி - துன்பக்கடல். உலகியல் வாழ்வு நிலையா வியல்பால் துன்பம் விளைவித்தலின், அதனை மேற்கோடல் துன்பத்தில் வீழ்த லாதலால், உலக வெந்நெறியை வியந்து கொண்டதனால், “துன்ப வாரிதனை மடுத்தேன்” என்று இசைக்கின்றார். வாரி - கடல். மடுத்தல் - மூழ்குதல். வஞ்சம் மனத்தின் கண்ணதாகலின் “வஞ்ச மனத்தர்” எனவும், அவருடைய தொடர்பை உறவெனவும் உரைக்கின்றார். மேற்கூறிய குற்றச் செயல்கள் மனத்தில் இடம் பெற்றமையின், சிவனுடைய திருவடி நினைவு இல்லாதொழிந்தமையின், “உன் அடியை நினையேன்” என்றும், அதனால் அலமருதல் என் செயலாயிற்றென்பார், “அலமந்தேன்” என்றும் இயம்புகின்றார். படிறு - பொய் முதலாய குற்றங்கள். சாகும் நாளில் உயிரைக் கொண்டுசெல்லும் நமன், அது செய்த குற்றங்கட்கு ஈடாக நரகத்திற் புகுத்திச் செக்கிலிட்டாட்டுவனாகலின், “படுத்தே நமன் செக்கிடும்போது” என்று பகர்கின்றார். பெருந்துன்பமாம் என்பது புலப்பட “யாது படுவேனோ” என அறிவிக்கின்றார்.
இதனால், துறவு நெறியைப் புறக்கணித்து உலக நெறியை மேற்கொண்டு துன்பக்கடலில் வீழ்ந்து துயர் உறுதற்கும் நரக வேதனை எய்துதற்கும் சிவனது திருவடி நினையாத குற்றம் காரணம் எனக் குறித்தவாறாம். (5)
|