913.

     படுவேன் அல்லேன் நமன்தமரால்
          பரிவேன் அல்லேன் பரமநினை
     விடுவேன் அல்லேன் என்னையும்நீ
          விடுவாய் அல்லை இனிச்சிறிதும்
     கெடுவேன் அல்லேன் சிறியார்சொல்
          கேட்பேன் அல்லேன் தருமநெறி
     அடுவேன் அல்லேன் திருஒற்றி
          அப்பா உன்றன் அருள்உண்டே.

உரை:

     திருவொற்றியூர் அப்பனே, நின் அருள் துணைசெய்தலால் நமன் தூதரால் இறக்க மாட்டேன்; இறப்புக்காக வருந்த மாட்டேன்; என்னையும் நீ கைவிட மாட்டாய்; இனி யான் சிறிதும் கெடமாட்டேன்; சிறுமைப் பண்புடையவர் சொல்லைக் கேட்க மாட்டேன்; அறநெறியை யழிக்க மாட்டேன். எ.று.

     படுதல் - இறத்தல். வாழ்நாள் உலந்தபோது நமன் தூதர் போந்து உயிர் கொண்டு போவர் என்பதுபற்றிப் “படுவே னல்லேன் நமன் தமரால்” என்றும், ஒருகால் அந்நமன் தமர் என் உயிரைப் படுக்க வரினும் நான் வருந்த மாட்டேன் என்பார் “பரிவே னல்லேன்” என்றும் கூறுகின்றார். தூதுவர் கைப்பற்றினும் அவரோடே இருவிசும் பேறிச் சிவனை அடைவித்தற்குத் திருவருள் துணையாம் என்னும் துணிவு பற்றி, “பரிவேனல்லேன்” என்று கூறுகின்றா ரென்றுமாம். “வெந்தூதுவரோடு இறப்பன், இறந்தால் இரு விசும் பேறுவன்” (தனி.விருத்.) என நாவுக்கரசர் உரைப்பர். தன்னைச் சார்ந்தாரைப் பிரியா வகையிற பிணிக்கும் பெருமானாதலால் யான் நின்னை விடமாட்டேன், நீயும் என்னை விடமாட்டாய் என்றற்குப் “பரமனினை விடுவே னல்லேன் என்னையும் நீ விடுவாயல்லை” என்று சொல்லுகின்றார். “தமக்கு அன்பு பட்டவர் பாரமும் பூண்பர்” (ஆரூர்) என்று நாவுக்கரசர் அறிவித்துள்ளார். பரமனைப் பற்றிக்கொண்டு விடாப்பிடியுடன் சிந்திப்பதால் கேடில்லாமையைத் தேர்ந்து கொண்டமையின் “இனிச் சிறிதும் கெடுவே னல்லேன்” என்றும், கெடுதற் கேதுவாய சிறியோர் சிறுமை யுரையையும் கேளேன் என்பார், “சிறியார் சொல் கேட்பேனல்லேன்” என்றும், “தரும நெறி யடுவேனல்லேன்” என்றும் இயம்புகின்றார்.

     இதனால், திருவருள் உண்மை துணிந்தமையின், இறப்புக்கும் கேட்டுக்கும் அஞ்சாமை கூறியவாறாம்.

     (6)