914.

     உண்டோ எனைப்போல் மதிஇழந்தோர்
          ஒற்றி அப்பா உன்னுடைய
     திண்டோள் இலங்கும் திருநீற்றைக்
          காண விரும்பேன் சேர்ந்தேத்தேன்
     எண்தோள் உடையாய் என்றிரங்கேன்
          இறையும் திரும்பேன் இவ்வறிவைக்
     கொண்டே உனைநான் கூடுவன்நின்
          குறிப்பே தொன்றும் அறியேனே.

உரை:

     திருவொற்றியூர் அப்பனே, நின்னுடைய திண்ணிய தோள்களில் விளங்கித் தோன்றும் திருநீற்றைக் காண விரும்புகின்றேனில்லை; அன்பர்களோடு சேர்ந்து நின்னை யேத்துதல் இல்லேன்; எட்டாகிய தோள்களையுடையவனே என்று பரவி என் தவற்றுக்குச் சிறிதும் இரங்குதல் செய்யேன்; நின் பக்கம் திரும்புவதில்லேன்; இக்குறைகளையுடைய அறிவைக்கொண்டே நின்னைக் கூடலுறுவேன்; நின் திருக்குறிப்பு யாதோ, ஒன்றும் அறியேன், இவ்வண்ணம் என்னைப் போல் நல்லறிவை இழந்தோர் உலகில் உண்டோ, கூறுக. எ.று.

     சிவபெருமான் திருத்தோள்களில் கிடந்து ஒளி திகழும் திருநீறு கண்டார் உள்ளத்தைக் கவர்ந்து இன்பம் செய்வதாக, யான் கண்டு மகிழ விரும்புகின்றேனில்லை என்பார், “உன்னுடைய திண்டோள் இலங்கும் திருநீற்றைக் காண விரும்பேன்” என்று இயம்புகின்றார். “காண வினியது நீறு கவினைத் தருவது நீறு” என்று ஞானசம்பந்தரும், “சேலும் கயலும் திளைக்குங் கண்ணாரிளங் கொங்கையிற் செங்குங்குமம் போலும் பொடியணி மார்பிலங்கும் என்று புண்ணியர் போற்றிசைப்ப” ரென்று சேந்தனாரும் சிறப்பிப்பது நோக்குமிடத்துத் “திண்டோளிலங்கும் திருநீற்றைக் காண விரும்பேன்” என்பது குறையறிவின் கொடுமையை மிகுவித்துக் காட்டுகிறது. தனித்து நின்று சிவனைப் பரவுதலினும் சிவனடியாரொடு சேர்ந்து ஏத்தல் சிறப்பென்பர்; தனித்த வழித் தன் தனி நலமே சூழ்ந்து கூம்பிநிற்கும் உயிரறிவு அன்பரொடு சேர்ந்த வழிச் சிவமனம் தோய்ந்து விரிந்து பரந்து சிவ வழிபாட்டில் எளிதில் ஒன்றுதலால் அன்பரொடு சேர்ந்தே வழிபடுக என்று சான்றோர் அறிவுறுத்துகின்றனர். “நின்னை யெப்போதும் நினையவொட்டாய் நீ நினையப்புகில், பின்னையப் போதே மறப்பித்துப் பேர்த்தொன்று நாடுவித்தி” (தனி) எனத் திருநாவுக்கரசர் தனி நின்று செய்யும் வழிபாட்டின் நிலையை விளக்குகின்றார். மெய்கண்டார், “அன்பரொடு மரீஇ ஆலயம் தானும் அரனெனத் தொழுக” என்றாராக, சிவஞான முனிவர், “சிவபத்தர்களோடு இணங்குக, அல்லாதார் அஞ்ஞானத்தை யுணர்த்துவர்” என விளக்குவதும், “வலஞ்சுரி யிடமாகக் கொண்ட நாதன் மெய்த் தொழில்புரி தொண்டரோடு இனிதிருந்தமையாலே விண்டொழிந்தன நம்முடை வல்வினை” (வலஞ்சுழி) என்று இசைக்கின்றதும் இங்கே நினைவு கூர்தல் தகும். இங்ஙனம் சிவபத்தரொடு சேர்ந்து ஏத்துவது இல்லேன் என்பாராய், “சேர்ந்தேத்தேன்” என்று மொழிகின்றார். செய்வினைக்கண் குறையுண்டாயின் அது நோக்கி மனம் இரங்குவதும், பின் அக்குறைக்கு இடமுண்டாகாவாறு ஒழுகுவதும் அறிவுடை மக்கட்கியல்பு; யான் அதனைச் சிறிதளவும் செய்வதில்லை என்பார், “இரங்கேன் இறையும்” என்றும், செய்வினைக் குறையைத் திரும்ப நோக்குவதோ, அதுகுறித்து நின்னை நினைந்து வேண்டுவதோ யான் செய்வதில்லை என்பாராய் “திரும்பேன்” என்றும் விளம்புகின்றார். இவ்வறிவு எனச் சுட்டியது, இக் குறையுடைய அறிவு என்ற பொருள் தருகிறது, அறிவு குறைந்தாரைச் சேர்த்தல் கூடாதென்று என்னை ஏலாது மறுத்தற் கிடனுண்மை நோக்காமல் உன் திருவடியை நினைந்து ஏத்திக் கூடலுறுகின்றேன்; என்னைக் கொள்ளுவையோ தள்ளுவையோ நின்னுடைய திருக்குறிப்பை யறியேன் என்றற்கு, “இவ்வறிவைக் கொண்டே உனை நான் கூடுவன், நின் குறிப்பு ஏது, ஒன்றும் அறியேன்” என்று உரைக்கின்றார்.

     இதனால், குறையறிவால் தவறு செய்து கூடலுறும் தன்னைப்பற்றி இறைவன் திருக்குறிப்பறிய விரும்பும் கருத்தைப் புலப்படுத்தியவாறாம்.

     (7)