915.

     அறியேன் உன்தன் புகழ்ப்பெருமை
          அண்ணா ஒற்றி அப்பாநான்
     சிறியேன் எனினும் நினைஅன்றித்
          தெளியேன் மற்றோர் தேவர்தமை
     வெறியேன் பிழையைக் குறித்தெனைக்கை
          விட்டால் என்செய் வேன்அடியேன்
     நெறியே தருதல் நின்கடன்காண்
          நின்னைப் பணிதல் என்கடனே.

உரை:

     அண்ணா, ஒற்றியூர் அப்பா! உன்னுடைய திருப்புகழின் பெருமையை யான் அறிகிலேன்; நான் அறிவிற் சிறியேன்; என்றாலும்உன்னையன்றி வேறோர் தெய்வத்தைப் பரம்பொருளாகக் கொள்வதில்லை; வெறுவியனாகிய என் பிழைகளைப் பொருளாக நோக்கி என்னைக் கைவிடுவாயாயின், உன் திருவடியையே பற்றாக வுடைய யான் என்ன செய்குவேன்; எனக்கு நேரிய நெறியை உணர்த்துவது உனக்குக் கடன்; உன்னைப் பணிவதுதான் எனது கடனாம். எ.று.

     அண்ணன் - அணுகி முறையிடற்குரிய எளிவந்த தலைவன்; அண்ணா என விளி யேற்றது. “அரிய கற்றா சற்றார் கண்ணும் தெரியுங்கால், இன்மை யறிதே வெளிறு” (குறள்) என்று சான்றோர் கூறுதலால், மக்களறிவு குறையுடைய தென்பது தெளிவாம்; மக்களினத்தவனாகிய யான் குறையுடைய அறிவுகொண்டு குறைவிலா நிறைவாகிய உனது பெரும் புகழை நன்கறிதல் கூடாமையால், “அறியேன் உன்றன் புகழ்ப் பெருமை, காரணம் நான் சிறியேன்” என்று இசைக்கின்றார். சிறியேன் என்பதிற் சிறுமை, குறையுடைமை; பெருமையைச் சிறுமை யறியலாகா தென்பது பற்றி, “புகழ்ப் பெருமை யறியேன் சிறியேன்” என நிற்கும் நயம் காண்டற் குரியது. “என்னை யொப்பார் உன்னை எங்ஙனம் காண்பர் இகலியுன்னை, நின்னை யொப்பார் நின்னைக் காணும்படித்தன்று நின் பெருமை” (தனி.விருத்.) எனத் திருநாவுக்கரசர் வேறு கூறுவது காண்க. சிறியனாயினும் நீயே தனிப்பெரும் பரம்பொருள் எனத் தெளிய அறிந்துளேன் என்பாராய், “எனினும் நினையன்றித் தெளியேன் மற்றோர் தேவர் தமை” என்று இயம்புகின்றார். இவ்வாறே மணிவாசகப் பெருமான் “உள்ளேன் பிற தெய்வ முன்னையல்லா தெங்கள் உத்தமனே” (சதக.) என்று கூறுவர். நல்லறிவும் நற்குணமும் நற்பயப்பாடும் தன்கண் இல்லாமை புலப்பட, “வெறியேன்” எனவும், பிழைகள் பல வுள்ளமை தோன்றப் “பிழை” எனவும் குறித்தலால், நலங்களில் வெறுவியனாயினும் பிழைகள் மிகவுடையேன் என்றும், அவற்றைக் கண்டு வெறுப்புற்று என்னைக் கைவிடல் கூடாது; கைவிடில் வேறு செயல் வகை யொன்றும் இல்லேன் என்பாராய், “என் செய்வேன்” என்றும் முறையிடுகின்றார். அறிவிற் சிறியனும் நலங்களில் வெறியனு மாயினும் யான் உன் திருவடியல்லது பற்றுக் கோடு பிறிதில்லேன் என்பது தோன்ற “அடியேன்” எனத் தொடர்பு கூறி, யான் திருவருணலத்தைப் பெறுதற்குரிய நெறியை அறிவுறுத்தருள வேண்டும் என வேண்டலுற்று, “நெறியே தருதல் நின் கடன்” எனவும், உனக்குரிய பணிகளைச் செய்வதே என் கடன் எனத் தெரிவிப்பாராய், “நின்னைப் பணிதல் என் கடனே” எனவும் விளம்புகின்றார். “தன் கடன் அடியேனையும் தாங்குதல்; என் கடன் பணி செய்து கிடப்பதே” என்று திருநாவுக்கரசர் கூறிய கருத்துக்கு விளக்கமாவது காண்க.

     இதனால், சிவனது திருவருணெறி யறிந்து பணி செய்தல் கடன் என்பது விளக்கியவாறாம்.

     (8)