918.

     நாடி அலுத்தேன் என்அளவோ
          நம்பா மன்றுள் நன்குநடம்
     ஆடி மகிழும் திருஒற்றி
          அப்பா உன்தன் அருட்புகழைக்
     கோடி அளவில் ஒருகூறும்
          குணித்தார் இன்றி ஆங்காங்கும்
     தேடி அளந்தும் தெளிந்திலரே
          திருமால் முதலாம் தேவர்களே.

உரை:

     நம்பனே, மன்றில் நின்று திருநடம் நன்றாகப் புரிந்து மகிழும் திருவொற்றியூர் அப்பனே, உன்னுடைய அருட்புகழை நன்கு அறிய முயன்று அயர்ந்து போனேன்; அறிதல் என்னளவில் அமையுமோ? அப் புகழின் கோடியளவான கூறுகளில் ஒரு கூறும் அளந்தறிந்தவ ரில்லாமையால், ஆங்காங்கே திருமால் முதலிய தேவர்கள் புகழ் பரவிய எல்லையைத் தேடி அளவிட்டுக் கண்டு தெளிந்தவரில்லை, காண், எ.று.

     நம்பன் - சிவனுக்குரிய சிறப்புப் பெயர்களில் ஒன்று. உயிர்த்தொகை யனைத்துக்கும் நலமுண்டாகுமாறு திருநடம் நிகழ்தலால் “நன்கு நடமாடி மகிழும்” என நவில்கின்றார். மாயைதனை யுதறி வல்வினையைச் சுட்டுமலம், சாய வமுக்கியரு டான் எடுத்து--நேயத்தால் ஆனந்தவாரிதியி லான்மாவைத் தானழுத்தல், தான் எந்தையார் பரதம் தான்” (உண். விள். 37) என முன்னோர் மொழிவது காண்க. அருட் செயலால் விளைந்த புகழ் என்றற்கு “அருட் புகழ்” எனவும், அதனைச் சிறிதளவும் அறிந்திலர் என்றற்குக் “கோடி அளவில் ஒருகூறும் குணித்தார் இன்றி” எனவும், திருமால் அடியும் பிரமன் முடியும் காண முயன்ற செயலை, “ஆங்காங்கும் தேடி அளந்தும் தெளிந்திலரே திருமால் முதலாம் தேவர்களே” எனவும் எடுத்துரைக்கின்றார். தேடி யளந்தும் காணாமை அறிவை மயக்கினமை புலப்பட, “தெளிந்திலர்” என்று கூறுகிறார். இக் கருத்தை “இருநிலம் தாவினாலும் நாற்ற மாமலர் மேலேறும் நான்முகன் இவர்கள் கூடி, ஆற்றலால் அளக்கலுற்றார்க்கு அழலுரு வாயினானே” (கோடி) என்று திருநாவுக்கரசர் உரைப்பது காண்க. இங்ஙனம் திருமால் முதலாம் தேவர்கள் நின் அருட் புகழ்ப்பெருமையைத் தெளியாராயினமை யுணராது, நான் பன்னாளும் பன்முறையும் பல்வகையாலும் அறிய முயன்று தளர்ந் தொழிந்தேன் என்பாராய் “நாடி யலுத்தேன்” என்றும், நன்கறிதல் என் அறிவளவன்று என்றற்கு “என்னளவோ” என்றும் எடுத்து மொழிகின்றார்.

     இதனால், இறைவன் அருட்புகழை அளந்தறிய முயன்ற திருமால் முதலாம் தேவர்கள் தெளியா தொழிந்தமை யுணராது நம் தனியறிவு கொண்டு அறிய முயல்வது பெரிதும் அயர்வு விளைவிக்கும் என்பதாம்.

     (11)