33. ஆனந்தப் பதிகம்

திருவொற்றியூர்

    அஃதாவது பெற்ற இன்பத்தை நினைந்து வியந்து பத்துப் பாட்டுக்களால், பாடி மகிழ்தல். ஆனந்தமாவது ஒற்றியூர்ப் பரமன் தன்னை நினைப்பிக்கும் திருவருள் வடிவில் தன்னைத் தந்து அவ்வழியே வள்ளற் பெருமான் திருவொற்றியூர்த் தியாகப் பெருமான் புகழை யோதி உணர்ந்து தன்னைக் கொடுத்துப் பாட்டு மயமாய் நின்று பாடிப் பெற்ற திருவருள் இன்பம். தன்னைத் தந்து என்னைக் கொண்ட பெருமான் என்னை “அந்த மொன்றில்லா ஆனந்தம் பெறுவித்தான்” என மாணிக்கவாசகர் கூறுதற்கு விளக்கம் இங்கே கிடைப்பது காண்க. அவன் “ஆனந்த மாகட” லாதலால், அஃது இனிது கிடைத்த தென எண்ணுக.

    திருத்தணிகைப் பதியில் முருகப்பெருமானைக் கண்டு இன்புற்றுப் பல பாட்டுக்களாற் பாடிப் பராவிய வள்ளற் பெருமான், சென்னையை யடைந்ததும் திருவொற்றியூரிற் கோயில் கொண்டருளும் தியாகப் பெருமானைக் காண்டல் வேண்டுமென்ற எண்ணம் உண்டானதும், எண்ணியவாறே சென்று கண்டு களித்ததும், அவையே பொருளாகப் பாடச் சமைந்ததும் தியாகேசன் திருவருள் எனத் தெளிகின்றார்; தெளியுமிடத்துக் கைம்மாறு பாட்டல்லது இல்லாமை இப்பதிகத்திற் பொதுநிலையிற் றோன்றுகிறது. இதனுள், திருவொற்றியூர் சென்று வழிபாடு செய்தற்கு நினைவுறுத்திய திருவருளை எண்ணிய வள்ளலார், தமது தகுதியை நோக்குவதையும், ஓதி யுணர்ந்து பாடற்கமைந்த நலத்தையும், பக்தி ஞானப் பாங்கையும், சகளத் திருவுருக் காட்சி வாய்ப்பையும், அதன் வழி எய்திய சிவஞானத்தையும், பயன் கொள்ளும் பத்தி நலத்தையும், அதற்கெய்திய அருட் காவலையும், அதற்குள்ளிருந்து நுகர்ந்த இன்பத்தை நினைந்து உருகுவதையும் விளங்க வுரைத்தருளுகின்றார்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

919.

     குடிகொள் மலஞ்சூழ் நவவாயிற்
          கூட்டைக் காத்துக் குணமிலியாய்ப்
     படிகொள் நடையில் பரதவிக்கும்
          பாவி யேனைப் பரிந்தருளிப்
     பொடிகொள் வெள்ளைப் பூச்சணிந்த
          பொன்னே உன்னைப் போற்றிஒற்றிக்
     கடிகொள் நகர்க்கு வரச்செய்தாய்
          கைம்மா றறியேன் கடையேனே.

உரை:

     வெண்பொடியாகிய திருநீற்றை யணிந்த பொன் போன்றவனே, மலம் தங்குகின்ற ஒன்பது வாயில்களை யுடைய கூடாகிய இவ்வுடம்பைப் பேணிக் குணம் சிறிதுமின்றி உலக நடையிற் சிக்கி வருந்தும் பாவியாகிய என்பால் அன்பு கொண்டு காவலையுடைய ஒற்றியூர்க்கு உன்னைப் போற்றி வழிபட்டு வாழும் பொருட்டு என்னை வரச் செய்தாய்; கடையவனாகிய யான் இதற்கு என்ன கைம்மாறு செய்வேன்! எ.று.

     பொடி - திருவெண்ணீறு. “பொடி யேர்தரு மேனியன்” (கோ. திருப்பண்ணியர்) என நம்பியாண்டார் நம்பியும், செம்மேனி மேல் வெண்ணீறு பூசும் சிறப்பை, “செய்ய மேனி வெளிய பொடி பூசவர்” (புகலூர்) என ஞானசம்பந்தரும் உரைப்பது காண்க. “குடிகொள் மலஞ் சூழ் நவவாயிற் கூடு”--மலஞ்சூழ் குடிகொள் நவவாயிற் கூடு என மாற்றி, மலம் நிறைந்த நவவாயிற் கூடு எனவும், உயிர்குடிகொள் நவவாயிற் கூடு எனவும் இயைத்துக் கொள்க. உடலகத்து உள்ளும் புறமும் மலம் நிறைந்தொழுகுதலின் “மலஞ்சூழ் கூடு” என்கின்றார். மலம் வெளிப்படுதற்கு ஒன்பதும் வாயில்களாதலின், “மலஞ் சூழ் நவ வாயிற் கூடு” என்கின்றார். “மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடில்” (சிவபு.) என்பது திருவாசகம். உள்ளிருக்கும் உயிர் புறத்தே போகாதபடி காப்பதாகிய உடல், உண்டி முதலியவற்றால் உயிராற் காக்கப்படுதலின், “கூட்டைக் காத்து” எனக் கூறுகின்றார். “ஊனார் புழுக்கூடு இது காத்திங்கு இருப்பதானேன் உடையானே” (சதகம்) என வாதவூரரும் சொல்லி வருந்துகிறார், கூட்டைக் காத்துக் கிடப்பதன்றி, அதனின் நீங்கிக் கூடா வகையில் திருவருட் பேறெய்தும் குணமும் செயலும் இல்லாமை நினைந்து, “குணமிலியாய்” என்றும், கூட்டைக் காப்பதற்கேயுரிய நெறியும் பொருளுமே வழங்கும் உலக நடையால் பாவச் செய்கையும் துன்பப் பயனும் எய்தி வருந்துமாறு விளங்கப் ”படிகொள் நடையிற் பரிதவிக்கும் பாவியேனை” என்றும், ஒற்றி நகர்க்கு வந்தால் பாவச் செய்கைகளில் படியும் மனம் அருட்செயல்களில் திருவருட் பேற்றிற்குரிய நெறியில் இயங்கு மென்பார், “ஒற்றிக் கடிகொள் நகர்க்கு வரச்செய்தாய்” என்றும் இயம்புகின்றார். கடிகொள் நகர் - காவல் அமைந்த நகர். தன்கண் வந்து திருவருள் நெறியில் மனந்தோய்ந்தார்க்கு, மீண்டும் படிகொள் நடையிற் புகாமற் காக்கும் அருட் காவலுடைமையிற் “கடிகொள் நகர்” எனக் குறிப்பிற் புலப்பட வைக்கின்றார். பொருள் நெறியிற் புக்கு வருந்துபவர்க்கு அருள்நிலை காட்டி, இன்பந்தந்து அது கெடா வகை காத்தலும் செய்தலின், பேறு வேறின்மை கருதிக் “கைம்மாறறியேன்” என்கின்றார். கைம்மாறு தருதற்குரிய சால்பு தம்பால் இன்மை தோன்றக் “கடையேன்” என்று கூறுகின்றார். ஏனை வருமிடங்களுக்கும் இதுவே கூறிக்கொள்க.

     இதனால், உலக நடையில் சிக்கியுழலும் தமக்கு, ஒற்றி நகருக்கு வருவித்த நலத்துக்குக் கைம்மாறறியாமை கூறியவாறாம்.

     (1)