92.

    நடையேய் துயரால் மெலிந்து நினை
        நாடாதுழலும் நான் நாயிற்
    கடையே னெனினும் காத்த லென்றன்
        கண்ணே நினது கடனன்றோ
    தடைடயன் வருவாய் வந்துனருள்
        தருவா யிதுவே சமயங்காண்
    செடிதீர்த் தருளும் திருத் தணிகைத்
        தேவே ஞானச் செழுஞ்சுடரே.

உரை:

     தொழுவாருடைய துயர் தீர்த்து நல்லருள் புரியும் திருத்தணிகையில் எழுந்தருளும் தெய்வமே, ஞானச் செழுஞ்சுடரே, உலக நடை நல்கும் துன்பத்தால் உடலும் உள்ளமும் மெலிவுற்று உன்னை நினையாமல் வருந்தும் எளியேனாகிய நான் நாயினும் கடைப் பட்ட வனாயினும், எனக்குக் கண்போன்ற தலைவனாகிய நீ என்னைக் காத்தளிப்பது கடமையன்றோ? வருதற்குக் காலம் நீட்டிக்க வேண்டா; இது தக்க காலமாதலால் எழுந்தருளி உன் திருவருளைத் தருவாயாக, எ. று.

     செடி - துன்பம். தொழுதார்க்கு வரம் கொடுக்கும் தெய்வத் திருமலை திருத்தணிகை என்பது கொண்டு “செடி தீர்த்தருளும் திருத்தணிகை” என்று கூறுகிறார். சுடு தீயால் பொன் ஒளி மிகுதல் போல உலகியலில் சுடு துன்பம் உயிரறிவின் மலமாசு கழிப்பதாயினும், ஆற்றாமை பற்றி, “நடையேய் துயரால் மெலிந்து” என்றும், துயர் போக்கற்கு எழும் எண்ணங்களால் முருகப் பெருமானை நினையாமையால் எய்தும் தாழ்வை எண்ணி, “நினை நாடாது உழலும் நான் நாயிற் கடையேன்” என்றும் கூறுகின்றார். கடையராயினும் சார்ந்தவழிக் காத்தளித்தல் தலைவர் கடன் என்பார், “காத்தல் நினது கடன் அன்றோ” என உரைக்கின்றார். “தன்னை யடைந்தார் வினை தீர்ப்பதன்றோ தலையாயவர் தம் கடனாவது” (அதிகை) எனத் திருநாவுக்கரசர் கூறுவது காண்க. காலமும் இடமும் வாய்த்தபோது தவறாது கடனாற்று பவனாகிய நீ எனக்குக் காட்சி தந்து அருள் செய்க என வேண்டலுற்றுத் “தடையேன் வருவாய் வந்து உன் அருள் தருவாய் இதுவே சமயம் காண்” என்று முறையிடுகின்றார்.

     இதனால், காலமும் இடமும் வாய்த்தமையின் என்முன் எழுந்தருளித் திருவருளை வழங்குக என வேண்டிக் கொண்டவாறாம்.

     (11)