920. சாதல் பிறத்தல் எனும்கடலில்
தாழ்ந்து கரைகா ணாதழுந்தி
ஈதல் இரக்கம் எள்அளவும்
இல்லா தலையும் என்றனைநீ
ஓதல் அறிவித் துணர்வறிவித்
தொற்றி யூர்ச்சென் றுனைப்பாடக்
காதல் அறிவித் தாண்டதற்கோர்
கைம்மா றறியேன் கடையேனே.
உரை: சாதலும் பிறத்தலுமாகிய பிறவிக் கடலிற் கிடந்து, கரை காணமாட்டாமையால் அதன்கண் மூழ்கி, ஈகையும் இரக்கமும் எள்ளத்தனையும் இல்லாமல் திரியும் என்னையும் ஓதும் முறையைத் தெரிவித்து உன்னை உணரும் நெறியைக் காண்பித்துத் திருவொற்றியூரை யடைந்து உன்னைப் பாடுதற்கு வேண்டும் காதல் புரியும் நெறியையும் அறிவித்து ஆட்கொண்ட நின் திருவருட்கு, என்ன கைம்மாறு செய்வதென்று தெரிகில்லேன்! எ.று.
சாதலும் பிறத்தலுமாகிய இரண்டும் சேர்ந்தது பிறவிக் கடல், அது காரண காரியத் தொடர்ச்சியாய்க் கரையின்றி யிருத்தலால், கடல் எனப்படுகிறது. அக் கடலைக் கடத்தற்கு உதவு கருவிகளா யிருப்பன இரக்கப் பண்பும் ஈதற் செய்கையும் ஆதலின், அவை யிரண்டும் இல்வழி அக்கடலிற் கிடந்து வருந்துவதல்லது பிறிது வேறு போக்கின்மை தோன்றச் “சாதல் பிறத்தல் எனும் கடலில் தாழ்ந்து கரைகாணா தழுந்தி ஈதலிரக்கம் எள்ளளவும் இல்லாதலையும் என்றனை” என்கின்றார். தாழ்தல் - ஆழ்தல். ஈதலாற் பொருட் பற்றுறுதியும், இரக்கத்தால் பிறவுயிர்களை வாழ்வாங்கு வாழ்வித்து இருள்நீங்கி யின்பம் பெறுவித்தலுமாகிய இரண்டு செய்கைகளும் வீடுபேற்றிற்கு வாயிலாதலின் இவையிரண்டையும் விதந்தோதினார். இவற்றால், தான் வாழ்தலும், பிறரை வாழ்வித்தலும் ஆகிய இரண்டு அறங்களும் பயனாதல் காணலாம். ஓதல் - திருவைந்தெழுத்தை யோதுதல். உணர்வு - திருவைந்தெழுத்தின் பொருளை யுணர்தல். ஓதல் மந்தம், மானதம், உரையென மூவகைப்படும். ஓதியுணர்ந்தார்க்கு இறைவன்பால் இடையறாக் காதல் உளதாகலின், அக்காதலால் விளையும் பேரின்பத்தை அறிவித்தாலன்றி உயிர்கள் அறியாவாகலானும், அதனைப் பாட்டாலன்றி யுணரலாகாமை யானும் “பாடக் காதலறிவித்து” என்கின்றார். பாடும் காதல் திருவருட் பேற்றிற்கு வாயில் என்பதைப் “பாடுவார்க்கு அருளும் எந்தை” (முதுகுன்று) என்று ஞானசம்பந்தர் கூறுவது காண்க. இவ்வாறு ஓதலும் உணர்தலும் அருட் பேற்றிற்குரிய பாடற் காதலும் நல்கியமைக்குக் கைம்மாறு ஒன்றும் செய்யலாகாமை நோக்கிக் “கைம்மாறறியேன் கடையேனே” என்கின்றார்.
இதனால், ஓதலும் உணர்தலும் பாடுதலும் ஆகியவற்றின் பயன் உரைத்தவாறாம். (2)
|