921. அற்ப அளவும் நிச்சயிக்கல்
ஆகா உடம்பை அருமைசெய்து
நிற்ப தலதுன் பொன்அடியை
நினையாக் கொடிய நீலன்எனைச்
சற்ப அணியாய் நின்றன்ஒற்றித்
தலத்தைச் சார்ந்து நின்புகழைக்
கற்ப அருள்செய் தனைஅதற்கோர்
கைம்மா றறியேன் கடையேனே.
உரை: பாம்பை அணியாகப் பூண்ட பெருமானே, நிலவும் காலம் இதுவென்று சிறிதளவும் உறுதி கூறலாகாத இவ்வுடம்பை அருமையுடையதாகக் கருதிக் கொள்வதன்றி, உனது பொன்போன்ற திருவடியை நினைப்பதில்லாத கொடிய நீசனாகிய என்னை, ஒற்றிப் பதியையடைந்து உன்னுடைய புகழைக் கற்றுப் பாட அருளினாயாதலால், இதற்கு என்ன கைம்மாறு செய்வதென்று தெரிகிலேன்! எ.று.
பாம்பைப் பூணாரமாக அணிபவனாதலினால், “சற்ப அணியாய்” எனச் சிறப்பிக்கின்றார். “பாம்பலங்காரப் பரன்” என்று திருக்கோவையார் கூறுவது காண்க. அற்ப அளவு - சிறிது பொழுது; கண நேரம் எனினும் அமையும். நிலையின்றி மாயும் உடம்பு என்றற்கு, “நிச்சயிக்கலாகா உடம்பு” என்கின்றார். அருமை - ஈண்டு நெடிது நின்று பயன்படுதலுடைமை. அருமை செய்து நிற்றலாவது, பயன்படுதலுடைமை யெண்ணி, உணவாலும் உடையாலும் மருந்தாலும் பிறவற்றாலும் இனிது பேணுவது. நினையாமைக்குக் காரணம் உள்ளத்தின் நேர்மையின்மையாதலால், “நினையாக் கொடிய நீலன்” என்கின்றார். நீலன் - கீழ்மகன். நீலனை வடமொழியில் நீசன் என்பர். நிலையாவுடம்பை நிலையென நினைப்பதும், இறைவனது நிலைத்த திருவடியை நினையா தொழிவதும் நேர்மைக்கு மாறான செயலாதலின், அச்செயற்கண் ஈடுபட்டிருந்த தம்மை நேர்மை யிஃதென உணர்த்தித் திருவொற்றியூர் இறைவனை நினைந்து வழிபடுதற்குரிய ஞானம் அருளியமையின், “நின் ஒற்றித் தலத்தைச் சார்ந்து நின் புகழைக் கற்ப அருள் செய்தனை” என்கின்றார். “கற்க” என்பது எதுகை நோக்கிக் “கற்ப” எனத் திரிந்தது. ஞானத்திற்கு நேரிதாகத் தரும் பொருள் ஒன்றும் இன்மையின் “கைம்மாறறியேன்” கடையேனே என்று கூறுகின்றார். “பத்திமையால் பணிந்து அறியேன் தன்னைப் பன்னாள் பாமாலை பாடப் பயில்வித்தான்” (புள்ளிருக்கு) என நாவுக்கரசர் நவில்வது காண்க.
இதனால், பக்தி ஞானமருளிய திறத்தை எடுத்தோதியவாறாம். (3)
|