922.

     உண்டு வறிய ஒதிபோல
          உடம்பை வளர்த்தூன் ஊதியமே
     கொண்டு காக்கைக் கிரையாகக்
          கொடுக்க நினைக்கும் கொடியன்எனை
     விண்டு அறியா நின்புகழை
          விரும்பி ஒற்றி யூரில்நினைக்
     கண்டு வணங்கச் செய்ததற்கோர்
          கைம்மா றறியேன் கடையேனே.

உரை:

     உரமும் நீரும் உண்டு உள்வலி யின்றி வெறிதாகிய ஒதி மரம்போல் உடம்பை வளர்த்து ஊனாகிய ஊதியத்தைக் காக்கைக்கு இரையாகக் கொடுக்க முயலும் கொடியவனாகிய என்னை அருளி, திருமாலும் அறியாத நினது புகழை விரும்பித் திருவொற்றியூரில் நின்னைக் கண்டு வணங்கி வழிபடச் செய்தற்குக் கடையவனாகிய யான் என்ன கைம்மாறு செய்வதென்று தெரிகிலேன்! எ.று.

     ஊனாலும் உடம்பாலும் பெறற்குரிய பயனாகிய பக்தி ஞானத்தை எய்தாது வெறிதே வளர்த்து இறந்துபடுவதை யெண்ணி மனம் நொந்து வருந்துகின்றமை தோன்ற, “உடம்பை வளர்த்து ஊன் ஊதியமே கொண்டு காக்கைக் கிரையாகக் கொடுக்க நினைக்கும் கொடியேன்” என்கின்றார். பக்தி ஞானத்தால் இறை தாள் தொழுபவர், பக்தி ஞானத்தால் பயனடைவர் என்ற கருத்தை, ஊனடைந்த உடம்பின் பிறவியே, தானடைந்த உறுதியைச் சாருமால், தேனடைந்த மலர்ப் பொழில் தில்லையுள், மாநடஞ் செய்வரதன் பொற்றாள் தொழ” (பாயிரம்) எனச் சேக்கிழார் பெருமான் தெரிவிப்ப தறிக. “ஒதி மரம் பருத்தாலும் ஒன்றுக்கும் உதவாது” என்பது பழமொழி. “பூக்கைக் கொண்டு அரன் பொன்னடி போற்றிலார், நாக்கைக் கொண்டரன் நாமம் நவிற்றிலார், யாக்கைக்கே இரை தேடி யலமந்து, காக்கைக்கே இரையாகிக் கழிவரே” என்று திருநாவுக்கரசரும் கூறுவர். விண்டு - திருமால். சிவன் சகளத் திருமேனியைத் திருவொற்றியூரில் கண்டு வணங்கப் பெற்றதனைப் பாராட்டும் மகிழ்ச்சி புலப்படக் “கண்டு வணங்கச் செய்தற்கோர் கைம்மாறறியேன்” என்கின்றார்.

     இதனால், ஒற்றியூரில் இறைவன் திருவுருவைக் கண்டு வணங்கற்கு வாய்த்த நலம் பாராட்டியவாறாம்.

     (4)