923. நாய்க்கும் எனக்கும் ஒப்பாரி
நாடி அதற்கு விருந்திடுவான்
வாய்க்கும் ஒதிபோல் பொய்உடலை
வளர்க்க நினைக்கும் வஞ்சன்எனை
ஆய்க்கும் இனிய அப்பாஉன்
ஒற்றி யூரை அடைந்திருளைக்
காய்க்கும் வண்ணம் செய்ததற்கோர்
கைம்மா றறியேன் கடையேனே.
உரை: தாயினும் இனிய தந்தையே, நாய்க்கும் எனக்கும் ஒப்புமை நோக்கி அதற்கு விருந்து செய்தற் பொருட்டு, ஒதி மரம்போல் வாய்த்த என் பொய்யான உடம்பை வளர்க்கக் கருதுகின்ற வஞ்ச மனமுடைய என்னைத் திருவொற்றியூரை யடைந்து என் மனத்திருளைப் போக்குமாறு செய்தருளிய உனக்குக் கடையவனாகிய யான் என்ன கைம்மாறு செய்வதெனத் தெரிகிலேன். எ.று.
உடலை வளர்க்கும் தாயினும் உயிரறிவை வளர்க்கும் சிறப்புடைமை பற்றி “ஆய்க்கும் இனிய அப்பா” என்கின்றார். ஒப்பாரி - ஒப்புமை, மக்களே போல்வார் கயவர் அவரன்ன, ஒப்பாரி யாம் கண்டதில்” (குறள்) என்று சான்றோரும் வழங்குதல் காண்க. நாய் பிணந்தின்னும் இயல்பினதாதல்பற்றி, வளமுற வளரும் உடம்பு அதற்கு இனிய உணவாம் என்பது கொண்டு, “அதற்கு விருந்திடுவான் வாய்க்கும் உடலை வளர்க்க நினைக்கும் வஞ்சன்” எனத் தம்மை இகழ்கின்றார். பருத்தும் உயர்ந்தும் வளர்வது பற்றி, ஒதிமரம் உவமையாயிற்று, நிலையாமை பற்றி உடலைப் “பொய்யுடல்” என்கின்றார். காய்தல் - போக்குதல். இயல்பாகப் பற்றி யிருக்கும் மல மறைப்பை இருள் எனவும், அதனை ஞான ஒளியால் நீக்குவது விளங்க, “இருளைக் காய்க்கும் வண்ணம் செய்தற்கு” எனவும், ஞானப் பொருளை வழங்கினார்க்குத் தரக் கடவதோர் கைம்மாறின்மையின் “கைம்மாறறியேன் கடையேனே” எனவும் இயம்புகின்றார்.
இதனால், பெற்ற சிவஞானத்திற்கு கைம்மாறு வழங்கு இயலாமை தெரிவித்தவாறாம். (5)
|