924. குருதி நிறைந்த குறுங்குடத்தைக்
கொண்டோன் வழியில் சென்றிடவா
யெருதின் மனத்தேன் சுமந்துநலம்
இழந்து திரியும் எய்ப்பொழிய
வருதி எனவே வழிஅருளி
ஒற்றி யூர்க்கு வந்துன்னைக்
கருதி வணங்கச் செய்ததற்கோர்
கைம்மா றறியேன் கடையேனே.
உரை: உதிரம் நிறைந்த வாய் குறுகிய குடத்தைக் கொண்டு செல்வோன் வழியிற் சென்று, இடப்பக்கத் தெருதின் மனத்தை யுடையனாய்ச் சுமந்து நன்மையைத் துறந்தலையும், என் தளர்ச்சி நீங்குமாறு வருக என அழைத்து, ஒற்றியூர்க்கு வழி அஃதென்று காட்டி, அங்கு வந்து உன்னையே நினைந்து விளங்கச்செய்த உன் திருவருட்குக் கடையவனாகிய யான் என்ன கைம்மாறு செய்வதென்று தெரிகிலேன்! எ.று.
புலாலுண்போன் கொன்ற விலங்கின் குருதியை வறுத்துண்டல் வழக்காதலின், அதனைக் குடத்திற் கொண்டு செல்பவனைக் “குருதி நிறைந்த குறுங் குடத்திற் கொண்டோன்” என்றும், அவன் நினைவு முற்றும், அதனை வறுத்தற் கண்ணும், உண்டு சுவைத்து மகிழ்தற் கண்ணுமே செல்லும் என்பது விளங்க, “இடவாய் எருதின் மனத்தேன்” என்றும் கூறுகின்றார். இடவாய் எருது - வண்டியில் இடப்பக்கமே பூட்டப்பட்டுப் பழகிய எருது. குருதிக் குடத்தை உடலைக் குறிப்பதாகக் கொண்டு, சுமந்தோனுடைய நினைவும் செயலும் கொண்டு வருந்தியுழைத்து இளைத்த இளைப்பு நீங்குதற் பொருட்டு வருதி யென்றாரென்றற்கு, “சுமந்து நலம் இழந்து திரியும் எய்ப்பொழிய” என்று மொழிகின்றார். இடப்பக்கமே செல்லும் மாட்டை உவமை கூறியது, பல பிறப்புப் பிறந்தும் பிறவிக் கேதுவான வற்றையே நினைந்தும் செய்தும் ஒழுகும் இயல்பு புலப்படுத்தற்கு, திருவொற்றியூர்க்கு வழி யருளுதலாவது பக்தி நெறி யறிவித்தல். வணங்குதற்கும் திருவருள் இன்றியமையாமையின், “வணங்கச் செய்ததற்கோர் கைம்மாறறியேன்” என்கின்றார். எருத்தின் மனத்தேன், குடங் கொண்டோன் வழியிற் சென்று, சுமந்து, இழந்து திரியும் எய்ப்பொழிய என இயைத்துக்கொள்க.
இதனால், பத்தி நெறி காட்டி வணங்குதற்கு அருள் செய்த நலத்துக்குக் கைம்மாறறியாமை உரைத்தவாறாம். (6)
|