925. பாவம் எனும்ஓர் பெருஞ்சரக்குப்
பையை எடுத்துப் பண்பறியாக்
கோவம் எனும்ஓர் குரங்காட்டும்
கொடியேன் தன்னைப் பொருட்படுத்தித்
தேவர் அமுதே சிவனேநின்
திருத்தாள் ஏத்த ஒற்றிஎனும்
காவல் நகரம் வரச்செய்தாய்
கைம்மா றறியேன் கடையேனே.
உரை: தேவர்கள் விரும்பும் அமுதமே, சிவபெருமானே. பாவம் என்ற பெரிய சரக்கு வைக்கும் பையைக் கையிற் கொண்டு, பண்பறிந்தொழுகும் பாடில்லாத சினம் என்று கூறப்படும் குரங்கை யாட்டுகின்ற கொடியவனாகிய என்னை ஒரு பொருளாகக் கருதி நின் திருவடியை வழிபடுதற் பொருட்டுத் திருவொற்றியூ ரென்னும் அருட் காவலமைந்த நகரத்துக்கு வருமாறு அருளினா யாதலால், உன் திருவருட்கு என்ன கைம்மாறு செய்வதென்று கடையேனாகிய யான் தெரிகிலேன்! எ.று.
பாவ வினைக்கு ஏதுவும் பயனுமாகிய பொருள் மிகவுடைய பையென உடம்பைக் குறிக்கின்றார். குரங்கை யாட்டுபவன் அதன் வாயிலாகப் பெறலாகும் பொருள்களைப் பையில் பெய்துகொள்வது போலச் சினத்தால் வருகிற பாவங்களை உடலிற் பெய்துகொள்ளும் கொடுமை புலப்படப் “பாவம் எனுமோர் பெருஞ்சரக்குப் பையை யெடுத்துப் பண்பறியாக் கோவம் எனுமோர் குரங்காட்டும் கொடியேன்” எனக் கூறுகின்றார். சரக்கு - பலவகைப் பொருள். தீவினைகள் பலவாதலின், அவற்றின் காரணமும் பயனுமாகிய பொருள் நிறைந்த உடம்பைப் “பாவம் எனும் பெருஞ்சரக்குப் பை” எனவும், சினம் மிக்க வழி நன்மை தீமைகளைத் தெரிந்துணரும் அறிவு மறைக்கப்படுதலின், “பண்பறியாக் கோவம்” எனவும், அதனால் நன்னெறியினின்றும் விலகும் கொடுமை யுண்டாதலின், “கொடியேன்” எனவும் கூறுகின்றார். குரங்காட்டிக்கு, குரங்கு பொருள் தருவிக்கும் கருவியாதல் போலத் தீவினை விளைவிற்குக் கோவம் கருவியாதல் பற்றிக் “கோவம் என்னும் குரங்காட்டும் கொடியேன்” என்று சொல்கிறார். பண்பு - அவரவர் பாடறிந் தொழுகும் தன்மை. பாவத்தாலும், அதனை விளைவிக்கும் கோவத்தாலும் விலக்கப்படுதற்குரிய தம்மைத் தனது பேரருளால் ஒற்றி நகர்க்கு வருக என நினைப்பித்தருளியமை பற்றிப் “பொருட் படுத்தி” எனப் புதன்றுரைக்கின்றார். பாவச் சுமையால் சிதறிக் கெடவிருந்த தம்மைத் திருவொற்றியூர்க்கு வந்து பாடும் பணியாற் பத்தி செய்தற்குத் தமக்கு அருளிய நலம் புலப்படத் திருவொற்றியூரைக் காவல் நகர் எனச் சிறப்பிக்கின்றார். இது, கைம்மாற்றின் எல்லை கடந்த செயலாதலின், “கைம்மாறறியேன்” எனக் கட்டுரைக்கின்றார்.
இதனால், தம்மை ஒற்றியூர்க்கு வரச்செய்த அருட் காவலை வியந்துரைத்தவாறாம். (7)
|