926. பொள்ளற் குடத்தின் புலால்உடம்பைப்
போற்றி வளர்த்துப் புலன்இழந்தே
துள்ளற் கெழுந்த மனத்துடனே
துள்ளி அலைந்த துட்டன்எனை
உள்ளற் கறிவு தந்துன்றன்
ஒற்றி யூர்க்கு வந்துவினைக்
கள்ளப் பகைநீக் கிடச்செய்தாய்
கைம்மா றறியேன் கடையேனே.
உரை: ஓட்டைக் குடம் போன்ற புலால் நாறும் உடம்பைப் பேணி வளர்த்து நல்லறிவிழந்து துள்ளி யெழுகின்ற மனத்துடன் துள்ளித் திரிந்த துட்டனாகிய என்னை, உன்னையே நினைத்தற்குரிய அறிவருளித் திருவொற்றியூர்க்குப் போந்து வினையாகிய கள்ளர் பகையைக் கடிந்துதவிய பெருமானே, இவ்வருட் செயற்குக் கடையனாகிய யான் என்ன கைம்மாறு செய்வதென்று தெரிகிலேன். எ.று.
பொள்ளற் குடம் - ஓட்டைக்குடம்; இதனை இல்லிக்குடம் எனவும் வழங்குவர். ஒன்பது வாயில்களுடைமை பற்றி, உடம்பைப் “பொள்ளற் குடம்” என்கின்றார். மயிர்க்கால் தோறும் எண்ணிறந்த பொள்ளலுடைமைபற்றி இங்ஙனம் கூறுகின்றார் என்பதுமுண்டு. புலால் உடம்பு - புலால் நாறும் உடம்பு; ஊனடைந்த உடம்பு எனினுமமையும், போற்றாவிடத்துத் தீநாற்றம் எழுவதுபற்றிப் “போற்றி வளர்த்து” என்று கூறுகின்றார். புலன் - நல்லறிவு. மான்போலத் துள்ளும் இயல்பினதாகலின், “துள்ளற் கெழுந்த மனம்” என்றும், அதன் வயப்பட்டுத் துட்டத்தன்மையுற்று, எங்கும் துள்ளித் திரிந்த தமது செயற்கு வருந்துகின்றமை புலப்படத் “துள்ளியலைந்த துட்டனெனை” எனவும் உரைக்கின்றார். துட்டத்தன்மைக்கு ஏதுவாகிய வினைப் பிணிப்பை நீக்கித் தன்னை நினைத்தற்கு வேண்டிய அறிவும் நெறியும் தந்து, இறைவன் ஆண்டு கொண்ட தன்மையை வெளிப்படுத்துவாராய், “உள்ளற் கறிவு தந்து உன்றன் ஒற்றியூர்க்கு வந்து வினைப்பகை நீக்கிடச் செய்தாய்” என்று இயம்புகின்றார். “தன்னையும் தன் திறத்தறியாப் பொறியிலேனைத் தந்திறமும் அறிவித்து நெறியும் காட்டி” (எறும்பி) எனத் திருநாவுக்கரசரும், “அறிவிலாத எனைப் புகுந்தாண்டு கொண்டு அறிவதை யருளி, மேல் நெறி யெலாம் புலமாக்கிய எந்தை” (சதகம்) என்று திருவாதவூரரும் உரைப்பதனால், வினையாற் கெட்டாரைக் கெடாவாறு அறிவருளி ஆட்கொள்வது இறைவன் செயலாவது தெளிக. திருச்சதகம் உரைப்பதுபோல, அறிவருளிப் புலமாக்கிய நெறி ஒற்றியூர்க்கு வந்து வணங்கிப் பரவச் செய்தது என்பது விளங்க, “ஒற்றியூர்க்கு வந்து வினைக்கள்ளம் பகை நீக்கிடச் செய்தாய்” எனவும், இதற்குச் செய்யத் தக்க கைம்மாறு ஒன்று மறியேன் என்பார், “கைம்மாறறியேன் கடையேனே” எனவும் இசைக்கின்றார். பகைபோலத் துன்பம் விளைத்தலின், “வினைப் பகை” எனவும், கள்ளர் போல அறியாவண்ணம் வந்து தாக்குதலின், “வினைக் கள்ளப் பகை” என்றும் குறிக்கின்றார். “ஞானம் வினை தீரினன்றி விளையா” (சிவ. ஞா. போ.) என ஞானவான்கள் கூறுதலால் வினைப்பகை நீக்குதல் இன்றியமையாதென அறிக.
இதனால், வினை விளைவிக்கும் அறியாமை நீக்கி இறைவன் அறிவு தந்தருளுமாறு காட்டியவாறாம். (8)
|