927.

     கூட்டும் எலும்பால் தசையதனால்
          கோலும் பொல்லாக் கூரைதனை
     நாட்டும் பரம வீடெனவே
          நண்ணி மகிழ்ந்த நாயேனை
     ஊட்டுந் தாய்போல் உவந்துன்றன்
          ஒற்றி யூர்வந் துறநினைவு
     காட்டுங் கருணை செய்ததற்கோர்
          கைம்மா றறியேன் கடையேனே.

உரை:

     எலும்பாலும் தசையாலும் கூட்டியுருவாகியிருக்கும் பொல்லாத தோற்கூரை வேய்ந்த உடம்பைப் பரமவீடென்று எண்ணியடைந்து மகிழ்ந்திருக்கும் நாயேனை, எண்ணிப் பாலூட்டி வளர்க்கும் தாய்போல மனமுவந்து உன்னுடைய திருவொற்றியூருக்கு வந்துசேர நினைப்பூட்டிய கருணைச் செயற்குக் கடையனாகிய யான் என்ன கைம்மாறு செய்வதென்று தெரிகிலேன்! எ.று.

     உடம்பை ஆராயுமிடத்து, எலும்பும் ஊனும் தசை நாரும் நரம்பும் ஆகியவற்றால் அமைந்து, தோலால் அழகுற மூடியிருப்பது காணப்படுதலால், “கூட்டும் எலும்பால் தசையதனால் கோலும் கூரை” என்றும், அதனுள் நமது உயிர் இருந்து இயங்குவதால், “நாட்டும் பரம வீடு” என்றும் புனைந்துரைக்கின்றார். எல்லா நலங்களும் நிறைந்து குறைவின்றி யுயர்ந்த வீடு “பரம வீடு” எனப்படும். பரம வீட்டின் கண்ணிருந்து நுகரும் இன்பத்தால் மயங்குவராதலின், “கூரைதனைப் பரம வீடெனவே நண்ணி மகிழ்ந்த நாயேனை” என்று கூறுகின்றார். மகிழ்தல் - மயங்குதல். “மகிழ்ந்ததன் றலையும் நறவுண்டாங்கு” (குறுந். 165) என வருதல் காண்க. உண்ணப்படும் உணவின் நலனறியாது மறுக்கும் குழந்தைக்கு இனியன கூறி, உண்பிக்கும் தாய் “ஊட்டுந்தாய்” எனப்படுவள். இங்கே ஒற்றியூர் சென்று வழிபடும் நலன் நினையாது, மறந்து புறங்கிடந்த நெஞ்சினை நெறிப்படுத்தி நினைக்கச் செய்தமைபற்றி “ஊட்டுந்தாய்போல் உவந்து ஒற்றியூர் வந்து உற நினைவு காட்டுங் கருணை” என்று புகழ்கின்றார். உணவூட்டுதற்கு இறைவனது அருள் காரணமாதலின், “நினைவூட்டுங் கருணை செய்ததற்கு” என்றும், தாயன்புக்குக் கைமாறில்லாதவாறு போல இறைவன் அருட்கும் கைம்மாறு காணேன் என்பார். “கைம்மாறறியேன் கடையேனே” என்றும் இயம்புகின்றார். காட்டுங் கருணை - காட்டுதற்கு ஏதுவாகிய கருணை.

     இதனால், ஒற்றியூர் வந்து வழிபடுதற்கு நினைவு தோற்றுவித்த கருணையை வியந்து கூறியவாறு.

     (9)