928.

     ஊணத் துயர்ந்த பழுமரம்போல்
          ஒதிபோல் துன்பைத் தாங்குகின்ற
     தூணத் தலம்போல் சோரிமிகும்
          தோலை வளர்த்த சுணங்கன்எனை
     மாணப் பரிவால் அருட்சிந்தா
          மணியே உன்றன் ஒற்றிநகர்
     காணப் பணித்த அருளினுக்கோர்
          கைம்மா றறியேன் கடையேனே.

உரை:

     மிக்க அன்புடன் அருள் வழங்கும் சிந்தாமணியாகிய சிவபெருமானே, உணவு வகையால் வளர்ந்து நின்று, பழங்களையுடைய மரம்போல் தழைத்து, ஒதி மரம்போல் உயர்ந்து, துன்பங்களைத் தாங்குகின்ற தூணின் தலைபோலக் குருதி மிக்கு உடலை வளர்த்துக் கொண்ட நாய்போலும் என்னை, உன்னுடைய ஒற்றி நகரையடைந்து காண அருளிய அருட் செயற்குக் கடையனாகிய யான் கைம்மாறு யாது செய்வதெனத் தெரிகிலேன்! எ.று.

     ‘பரிவாய் மாண அருள் சிந்தாமணி’ என இயைக்க. மாண அருளல் - மிக அருளுதல், மிகுதற்கு ஏது பரிவு. சிந்தித்தவற்றைச் சிந்தித்தவாறே அருளும் தெய்வமணி சிந்தாமணி யெனப்படும். சிந்தாமணி போலுதலின், சிவபெருமானைச் சிந்தாமணியென்கின்றார். ஊண், ஊணம் என வந்தது. உரமும் நீரும் எருவும் முதலாயவற்றால் வளம் மிக வளர்ந்த மரம் ஊணத்துயர்ந்த மரமாம் என அறிக. இனி, உணவாய் உயர்நிலையிற் பயன்படும் மரங்களையுடைய மரத்தை “ஊணத்துயர்ந்த பழுமரம்” என்றார் எனினும் அமையும். பழுக்குங் காலத்தில் மரங்கள் இருள்படத் தழைத்து அழகுறத் திகழ்வது இயற்கையாதலின், “பழுமரம் போல் தழைத்து” எனவும், நெடிதுயர வளர்ந்திருக்கின்றமை யுணர்த்தற்கு, “ஒதி போல் உயர்ந்து” எனவும், சுமை தாங்கும் வன்மையுடைய தூண்போல் துன்பங்களைத் தாங்குகின்ற உடம்பென்றற்குத் “துன்பைத் தாங்குகின்ற தூணைத் தலம்போல்” என்றும் சொல்லுகின்றார். தூண், தூணம் என வந்தது. சோரி மிகும் தோல் - குருதி. மிகுந்து தோலால் மூடப்பட்டிருக்கும் உடம்பு. தோல், ஆகுபெயர். சோரி - குருதி. சுணங்கன் - நாய். இழிவு தோன்ற நாய் என்கின்றார். தழைத்து உயர்ந்து என்னும் சொற்கள் வருவிக்கப்பட்டன. அவாய் நிலையுமாம். துன்பங்களால் சுணங்கிக் கிடந்த என்னுள்ளத்தில் காணுதற்குரிய நினைவையெழுப்பிய அருள் நலத்தை வியந்து, “காணப் பணித்த அருளினுக்கோர் கைம்மாறறியேன்” என்கின்றார்.

     இதனால், ஒற்றியூரைக் காண நினைப்பித்த அருளை வியந்து பாராட்டியவாறு.

     (10)