929. புண்ணும் வழும்பும் புலால்நீரும்
புழுவும் பொதிந்த பொதிபோல
நண்ணுங் கொடிய நடைமனையை
நான்என் றுளரும் நாயேனை
உண்ணும் அமுதே நீ அமர்ந்த
ஒற்றி யூர்கண் டென்மனமும்
கண்ணுங் களிக்கச் செய்ததற்கோர்
கைம்மா றறியேன் கடையேனே.
உரை: தசைப் புண்ணும் வழும்பும் சீயும் புலால்நாறும் நீரும் புழுக்களும் பெய்து கட்டப்பட்ட பொதி போன்றமைந்த கொடியவுடம்பை உயிராகிய நான் என்று பேசும் நாயனைய என்னை, உண்ணும் அமுது போன்ற நீ எழுந்தருளும் திருவொற்றியூரைக் கண்டு, கண்ணும் மனமும் களிக்குமாறு செய்த அருட்செய்கைக்குக் கடையனாகிய யான் என்ன கைம்மாறு செய்வதென்று தெரிகிலேன்! எ.று.
வழும்பு - புண்ணிலிருந்தும் பிற வாயில்களினின்றும் ஒழுகும் தடித்த வெண்ணீர். புலால் நீர் - முடைநாறும் நீரொழுக்கு. பொதிந்த பொதி - சேரக் கட்டிவைத்த மூடை. நடைமனை - உடம்பு; புழு முதலிய உயிர்ப் பொருள்கள் குடியிருந்து வாழும் மனை போலுவதால் உடம்பை “மனை” என்றும், பிற மனைகள் போலின்றி நடக்கும் இயல்புடைமையின் “நடைமனை” என்றும் உரைக்கின்றார். நடை மனை, உடம்பிற்கு வெளிப்படை என்பர். கொடுமை செய்யும் புழு முதலிய உயிரினங்கட்கும் நோய்கட்கும் உறைவிடமாதலால் “கொடிய நடைமனை” எனவும், உயிரோடு உடனெய்தாது வினைப்பயனாய் உயிரின் வேறாய் வந்தடைதலால் “நண்ணும் நடைமனை” எனவும் நவில்கின்றார். நான் என்று கருதப்படும் உயிரின் வேறாயதனை நான் எனவே உணர்ந்தொழுகும் செயல்பற்றி “நான் என்றுணரும் நாயேன்” என்று இசைக்கின்றார். உண்ணும் அமுது - தேன்கலந்த பாலமுது. வெண்ணீற்றின் வெண்மையும் செம்மேனியும் செம்மையும் கொண்டு தெவிட்டாத இனிமையுற்று எவராலும் வெறுக்கப்படாத மேன்மையுடைமைபற்றி “உண்ணும் அமுது” எடுத்தோதப்படுகிறது. இப் பண்பனைத்தும் காணவும் சுவைக்கவும் படுவதனால் சிவபெருமானை “உண்ணும் அமுதே” என உருவகம் செய்கின்றார். காட்சியாற் கண்ணும், எய்தும் இன்பத்தால் மனமும் களிப்பது விளங்க, “கண்டு மனமும் கண்ணும் களிக்கச் செய்ததற்கு” என்றும், காட்சியின்பம் கருத்தின்பமாகிய இரண்டுக்கும் நேர்படுவதோர் பொருளின்மையால் “கைம்மாறு அறியேன்” என்றும் கட்டுரைக்கின்றார். கைம்மாறு, கையிற் பெற்றதற்கு ஒத்ததையோ உயர்ந்ததையோ கொடுத்தார்க்கு உவந்தளிப்பது.
இதனால், ஒற்றியூரிற் சிவனைக் கண்டு நுகர்ந்த இன்பத்தைப் புகழ்ந்தோதியவாறாம். (11)
|