6. குறையிரந்த பத்து
இப்பத்தின் கண் பாட்டுத் தோறும்
உள்ளக் குறைகளை வெளியிட்டு அருள் வேண்டி இரப்பது பற்றி
இஃது இப்பெயரினை யுடையதாயிற்று. இரந்து மனம் உருகிய வழி
அருளொளி எய்துமென்பது அறவோர் அறிவுரை.
இரந்திரந்துருக என் மனத்துள்ளே எழுகின்ற
சோதியே (கோயில்) என மணிவாசகப் பெருமான் அருளுவது
காண்க.
எண்சீர்க்கழி
நெடிலடி ஆசிரிய விருத்தம்
93. சீர்பூத்த வருட்கடலே கரும்பே தேனே
செம்பாகே எனது குலத் தெய்வமேநல்
கூர்பூத்த வேல் மலர்க்கை யரசே சாந்த
குணக்குன்றே தணிகைமலைக் கோவேஞானப்
பேர்பூத்த நின்புகழைக் கருதி யேழை
பிழைக்கவருள் செய்வாயோ பிழையைநோக்கிப்
பார்பூத்த பவத்திலுற விடிலென் செய்கேன்
பாவியே னந்தோ வன்பயந் தீரேனே.
உரை: சிறப்புப் பொருந்திய திருவருள் நிறைவாற் கடல் போன்றவனே, கரும்பும் தேனும் பாகும்போல் இனிப்பவனே, எனது குலத்திலுள்ளார் வழிபடும் தெய்வமே, நல்ல கூர்மை பொருந்திய வேற்படையை ஏந்தும் தாமரை மலர் போன்ற கையையுடைய அரசனே, சாந்த குணவடிவாகிய மலை போல்பவனே, தணிகை மலையில் எழுந்தருளும் தலைவனே, ஞானமூர்த்தி யெனப் பெயர் கொண்டிலங்கும் உனது புகழை நினைந்து ஏழையாகிய யான் வாழ அருள் புரிவாயோ அல்லது யான் செய்துள்ள பிழைகளை யெண்ணி மண்ணுலகத்திற் பிறந் துழலவே விடுவாயாயின் யான் யாது செய்வேன்; பாவமே யுடைய யான் பிறவி யச்சத்தினின்றும் நீங்கும் திறமில்லா திருக்கின்றேன், காண், எ. று.
எப்போதும் வழங்கிக் கொண்டிருப்பினும் அருள் வளம் குறையாமை பற்றிச் “சீர்பூத்த அருட்கடலே” என்றும், நினைக்குந் தோறும் நெஞ்சிற் சுரக்கும் இனிமையை வியந்து “கரும்பே தேனே செம்பாகே” என்றும் கூறுகின்றார். சிவக்கக் காய்ந்த கருப்பஞ் சாற்றின் பாகு “செம்பாகு” எனப்படுகிறது. குலத்தவர் பலரும் சேர்ந்து தொழும் தெய்வம் “குலதெய்வம்” என வழங்கும். கூர்மை வேற் படைக்கு இன்றியமையாதாயினும், துன்பம் போக்கி இன்பம் நல்குதலின், “நல் கூர் பூத்த வேல்” என்று கூறுகின்றார். சாந்த நிலையமாய்ச் சலிப்பின்றி யிருக்கும் தன்மையை நினைந்து “சாந்த குணக் குன்றே” எனவும், ஞானமே வடிவாவது கருதி “ஞானப்பேர் பூத்த நின் புகழ்” எனவும் உரைக்கின்றார். ஞான மூர்த்தி யென்னும் தன் பெயர்க் கேற்பத்தன்னை நினைவார்க்குத் திருவருள் ஞானம் நல்கி நாண் முடியுங்காறும் வாழ்விக்க வேண்டும் என்பார், “ஞானப் பேர் பூத்தநின் புகழைக் கருதி ஏழையிழைக்க அருள் செய்வாயோ” என மொழிகின்றார். மண்ணுலகில் வாழ்வதைப் பிழைத்தல் என வழங்கும் மரபு பற்றி “ஏழை பிழைக்க அருள் செய்வாயோ” என்கின்றார். பிழை செய்வதையும் பிழைத்தல் என்பவாகலின், “பிழையை நோக்கி” என்றும், பிழை செய்பவர் மேன் மேலும் பிறந்துழலுவ ரென்பது நினைந்து “பிழையை நோக்கிப் பார்பூத்த பவத்தில் உறவிடில்” என்றும், பிறந்துழல்க என ஆணையிடின் அது விலக்க வொண்ணாத தெனக் கருதி அஞ்சும் மனநிலைமை புலப்படப் “பவத்தில் உறவிடில் என் செய்கேன்” என்றும் இயம்புகிறார். பவம் - பிறப்பு. பிறவியச்சத்திலும் வலியது பிறிதில்லாமையால் “வன்பயம்” என்று எடுத்துரைக்கின்றார்.
இதனால், செய்த பிழைகளைக் கூறி, அது காரணமாகத் தோன்றும் அச்சம் தீருமாறு அருள்க என இரந்தவாறாம். இவண் வரும் பாட்டுக்கள் அந்தாதித் தொடையில் அமைந்தவை. (1)
|