933.

     துனியே பிறத்தற் கேதுஎனும்
          துட்ட மடவார் உள்ததும்பும்
     பனிஏய் மலம்சூழ் முடைநாற்றப்
          பாழும் குழிக்கே வீழ்ந்திளைத்தேன்
     இனிஏ துறுமோ என்செய்கேன்
          எளியேன் தனைநீ ஏன்றுகொளாய்
     கனியே கருணைக் கடலேஎன்
          கண்ணே ஒற்றிக் காவலனே.

உரை:

     கனி போல்பவனே, அருட்குக் கடலாகியவனே, திருவொற்றியூர்க்கு அரசனே, துனியே பிறவித் துன்பத்துக்கு ஏதுவாம் என்று உரைக்கும் துட்ட மகளிர் உடற்குள் ததும்பும் குளிர்ந்த மலம் கலந்து முடைநாறும் காழ்த்த குழியாகிய நிதம்பத்தின்கண் வீழ்ந்து மெலிந்தேனாதலால், இனி எனக்கு என்ன தீதுண்டாமோ, அறியேன், அதனைத் தடுத்துக்கொள்ள யான் என்ன செய்வேன்? எளியனாகிய என்னை நீ என்று கொள்வாயாக. எ.று.

     கனிபோல் இன்புறுத்தலின் சிவனைக் “கனி” என்று சிறப்பிக்கின்றார். அளப்பரிய அருளுடைமை பற்றிக் “கருணைக் கடலே” எனக் கட்டுரைக்கின்றார். உண்மை காண வுணர்த்துவதால் “என் கண்ணே” எனவும், ஒற்றி நகர்க்கண் இருந்து அருளரசு புரிதலின், “ஒற்றிக் காவலனே” எனவும் உவந்துரைக்கின்றார். கூடி யின்புறுதற்குரிய புலவி யூடல்களை விடுத்துத் துனிகொண்டு விலக்குவது, நுகர்ந்து கழித்தற்பொருட்டு மீளப் பிறத்தற் கேதுவாம் என்னும் காம நூலை எடுத்துரைத்துக் காமக்கூட்டத்தை வலியுறுத்தும் மகளிரை, “துனியே பிறத்தற் கேதுவெனும் துட்ட மடவார்” என்று சொல்லுகின்றார். துஷ்ட மடவார், துட்ட மடவார் என வந்தது. பனியேய் மலம் என்பது வெள்ளை (Leucorrhoea) என வழங்குகிறது. தன்கண் வீழ்ந்தார் மனத்தே மீளாவண்ணம் பிணித்து மேன்மேலும் வீழச்செய்து அறிவு செயல்களைப் பாழ்படுத்தலால் நிதம்பத்தைப் “பாழ்த்த குழி” என்று இகழ்கின்றார். குழிக்கு என்றவிடத்து ஏழாவதன்கண் நான்காமுருபு வந்தது; “கிழங்கு மணற் கீன்ற கிளையரி நாணல்” (அகம்) என்றாற் போல, வீழ்பவர் மேனி நாளடைவில் மெலிதலால் “வீழ்ந்திளைத்தேன்” என விளம்புகின்றார். இளைத்த வுடல் மேலும் மெலிந்து முடிவில் பல்வகை நோய்க்கிடனாதலால், “இனி ஏதுறுமோ” என அஞ்சுகின்றார். மாற்று மருந்தின்மையின், “என் செய்கேன்” என்று கையறவு படுகின்றார். காம விச்சைக்கு எளியரானமையின் “எளியேன்” என்றும், பெண்ணொடு கூடிப் பெரும்போக முடையவனாகியும் யோகமே புரிந்து விளங்குதலால், சிவனை யல்லது புகலளிப்பார் வேறு எவரும் இன்மையால், “எளியேன்றனை ஏன்று கொள்ளாய்” என்றும் வேண்டிக்கொள்கின்றார். “நல்லூர்ப் பெருமணத்தான் நல்ல போகத்தன் யோகத்தையே புரிந்தானே” என ஞானசம்பந்தர் தெரிவிப்பது காண்க.

     இதனால், மகளிர் முயக்கிலே நெடிது வீழ்ந்து இளைத்தொழிந்த எனக்கு ஏதுறுமோ என்ற அச்சம் வருத்துவதால், எளியேனை ஏன்று கொள்ளென வேண்டிக்கொண்டவாறாம்.

     (4)