934.

     வலமே உடையார் நின்கருணை
          வாய்ந்து வாழ்ந்தார் வஞ்சகனேன்
     மலமே உடையேன் ஆதலினால்
          மாதர் எனும்பேய் வாக்கும்உவர்ச்
     சலமே ஒழுக்குப் பொத்தரிடைச்
          சாய்ந்து தளர்ந்தேன் சார்பறியேன்
     நலமே ஒற்றி நாடுடையாய்
          நாயேன் உய்யும் நாள்என்றோ.

உரை:

     நலம் பொருந்திய ஒற்றியூர் நாடுடைய பெருமானே, வலிமையுடையவர்கள் உன் கருணையைப் பெற்று வாழ்வு பெற்றுள்ளார்களாக, வஞ்சகனாகிய யான் மலமுடையனாதலால், மகளிர் என்னும் பேய்கள் பெய்யும் உப்புப் பொருந்திய சிறுநீர் கழியும் நிதம்பத்தின்கண் வீழ்ந்து மெலிந்து தளர்வுற்று, எனக்கு இனிச் சாரக்கடவது யாது என அறியாது வருந்துகிறேன்; நான் உய்திபெறும் காலம் எப்போது? எ.று.

     நல்வாழ்வுக்குரிய இடம் பொருள் சிறப்புக்கள் இங்கே “நலம்” என்று குறிக்கப்படுகின்றன. வலம் - அறிவு வலியும், மன வலியும். அறிவு வலத்தாலும் மன நலத்தாலும் சிவனது திருவருளையறிந்து உரிய பணி புரிந்து அருணலம் சிறக்கப்பெற்று இனிதிருக்கும் மாண்பு கண்டு மகிழ்கின்றமை தோன்ற “வலமே யுடையார் நின் கருணை வாய்ந்து வாழ்ந்தார்” என்றும், தன்னை நோக்கித் தன்பால் வஞ்சம் நிறைந்து மலவிருள் செறிந்திருப்பதைக் காண்கின்றாராதலால், “வஞ்சகனேன் மலமே யுடையேன்” என்றும் உரைக்கின்றார். வலமோ கருணை நலமோ இன்றி மலமே மிக்குள்ள தென்பதைத் தேற்றேகாரம் தந்து காட்டுகின்றார். மலவிருள் திருவருளை மறைத்து உலகியல் மகளிர்பால் பெறலாகும் காமநுகர்ச்சியைக் காட்டி அதன்கண் வீழ்த்தினமையின், “மலமே யுடையே னாதலினால் மாதர்எனும் பேய் வாக்கும் உவர்ச்சலமே ஒழுக்குப் பொத்தரிடைச் சாய்ந்து தளர்ந்தேன்” என்று விளங்க வுரைக்கின்றார். வாக்குதல் - ஊற்றுதல். உவர்ச்சலம் - சிறுநீர். சலமொழுக்கும் பொத்தர் என்றது, சிறுநீர் கழியும் நிதம்பப் புழை. மகளிர் முயக்கத்தால்உடல் வலி குன்றுதல் பற்றிச் “சாய்ந்து தளர்ந்தேன்” எனக் கூறுகின்றார். தளர்ந்தார் எழுதல்வேண்டிச் சார்பு நாடுவது இயல்பாதலால் அதனை நாடி ஒன்றும் காணப்படாமை தோன்ற, “சார்பு அறியேன்” என்றும், எனவே யான் தக்க சார்பு பெற்று நலம் பெறும் நாள் உண்டாயின் அஃது எப்போது எய்தும் என்பார், “நாயேன் உய்யும் நாள் என்றோ” என்றும் இயம்புகின்றார். உயிர்கள் யாவும் ஒருகாலத்தே உய்தி பெற்று வீடு பெறும் என்பது சைவநூற் கொள்கை.

     இதனால், சார்பு காணாது வருந்தும் தனக்கு உறுதி எய்தும் நாள் எப்போதென எண்ணி வருந்தியவாறாம்.

     (5)