935. நாளை வருவ தறியேன்நான்
நஞ்சம் அனைய நங்கையர்தம்
ஆளை அழுத்தும் நீர்க்குழியில்
அழுந்தி அழுந்தி எழுந்தலைந்தேன்
கோளை அகற்றி நின்அடிக்கே
கூடும் வண்ணம் குறிப்பாயோ
வேளை எரித்த மெய்ஞ்ஞான
விளக்கே முத்தி வித்தகமே.
உரை: காமவேளை எரித்துச் சாம்பராக்கிய மெய்ம்மை ஞான விளக்கமே, முத்திக்குக் காரணமாகிய பரம்பொருளே, நாளை நிகழவிருப்பதையறியும் திறமில்லாத நான், விடம் போன்ற மங்கையரின் ஆடவரை வீழ்த்தும் சிறுநீர்க் கழிவாயின்கண் பன்முறையும் ஆழ்ந்தெழுந்து வருந்தினேன்; இனியேனும் இக் கொள்கையைப் போக்கி, நின்னுடைய திருவடியைக் கூடி மகிழுமாறு அருள் புரிவாயோ? அதுவே யான் வேண்டுவது. எ.று.
காமவேளைச் சுருக்கமாக “வேள்” என்று குறிக்கின்றார். உமை நங்கை உடனிருந்து பணிசெய்யச் சிவன் மேற்கொண்டிருந்த தவத்தைக் காமவுணர்ச்சியை யெழுப்பிக் கலைக்க முயன்ற குற்றத்துக்காக வெகுண்டு, அவ்வேளை நெற்றிக்கண்ணால் நோக்கி யெரித்த வரலாற்றை நினைவுகூரும் வகையில், “வேளை எரித்த விளக்கே” என்றும், தவஞான வடிவமாய் இருந்தமையின் “மெய்ஞ்ஞான விளக்கே” என்றும், ஞானத்தின் செயலே விளக்கம் செய்வதாகலின், “ஞான விளக்கே” என்றும் சிறப்பிக்கின்றார். உணர்வு வடிவிற்றாயினும் ஆன்மா மலவிருளால் இறந்தகாலத்து வந்ததை மறத்தலும், எதிர்காலத்து வருவதறியாது மறைப்புண்டலும் எய்துவது பற்றி, “நாளை வருவ தறியேன்” எனவும், இன்று செய்வது இது வென்பார், “நஞ்சமனைய நங்கையர்தம் ஆளையழுத்தம் நீர்க்குழியில் அழுந்தியழுந்தி எழுந்தலைந்தேன்” எனவும் உரைக்கின்றார். ஆள் - ஆடவர். சிறுநீர் கழியும் நிதம்பவுறுப்பு, பன்முறையும் காமப்புணர்ச்சி மேற்கோடல் தோன்ற “அழுந்தியழுந்தி யெழுந்து” என்றும், எழுந்தவிடத்தும் நீக்கமின்றி அப் புணர்ச்சி விரும்பி அலைந்தமை விளங்க, “அலைந்தேன்” என்றும் இயம்புகின்றார். கோள் - கொள்கை; முதனிலை திரிந்த தொழிற்பெயர். திருவடியைக் கூடலால் உண்டாகும் பேரின்பம் என்றும் பொன்றாத சிவபோகமாதலால், “கோளை யகற்றி நின் அடிக்கே கூடும்வண்ணம் குறிப்பாயோ” என்று வேண்டுகிறார். மேற்கொண்டிருக்கும் காமக்கூட்டம் சிவஞானப் பேரின்பம் நல்காமை யுணர்ந்துரைக்கின்றாராகலின், “கோளை யகற்றி” என்றும், “திருவடிக்குக் கூடும்வண்ணம் குறிப்பாயோ” என்றும் கூறுகின்றார். திருவருளாலன்றிக் கோள் அகறலும் திருவடி கூடலும் இல்லையாதலால் “குறிப்பாயோ” என வினவுகின்றார்.
இதனால், காமக் களிப்பால் வருவதறியாத எனக்கு அக் கோளை நீக்கித் திருவடியைக் கூடும்வண்ணம் அருள் செய்ய வேண்டியவாறாம். (6)
|