936.

     முத்தி முதலே முக்கணுடை
          மூரிக் கரும்பே நின்பதத்தில்
     பத்தி முதலே இல்லாதேன்
          பரம சுகத்தில் படிவேனோ
     எத்தி அழைக்கும் கருங்கண்ணார்
          இடைக்குள் பிளந்த வெடிப்பதனில்
     தத்தி விழுந்தேன் எழுவேனேல்
          தள்ளா நின்ற தென்மனமே.

உரை:

     முத்தியின்பத்துக்கு முதற் பொருளாயவனே, மூன்று கண்களையுடைய முற்றிய கரும்பு போல்பவனே, நின் திருவடிக்கண் பத்தியுள்ளமே யில்லாத யான் பரம சுகமாகிய சிவானந்தத்தில் திளைப்பேனோ? ஏனெனில், இச்சை மொழிகளால் ஆடவரைக் கூடற் கழைக்கும் கரிய கண்களையுடைய மகளிரின் இடையில் பிளவு பட்டிருக்கும் வெடிப்பாகிய நிதம்பத்தில் தடுமாறி விழுந்தேனெனினும், எழுவேனாயின் மீளவும் என் மனம் அதற்குள் என்னை தள்ளுகின்றது. எ.று.

     முத்திக்குரிய ஞானமும் பயனுமாதலால் சிவனை “முத்தி முதல்” என்கின்றார். “முத்தி செய் ஞானமும் கேள்வியுமாய் நிற்கும் அத்தன்” (திருமந்.) என்று திருமூலரும், “முத்தா முத்தி தரவல்ல முகிழ்மென் முலையாளுமை பங்கா” (ஆலங்காடு) என்று நம்பி ஆரூரரும் கூறுவது காண்க. மூரிக்கரும்பு - நன்கு முற்றிய கரும்பு. பரம சுகப்பேற்றுக்குப் பத்தி முதற் காரணமாதலால், அஃது இல்லாமை நினைந்து “நின் பதத்தில்பத்தி முதலேயில்லாதே பரமசுகத்திற் படிவேனோ” என்று வருந்துகின்றார். பரமசுகம் - மேலான பேரின்பம். வஞ்சங் கலந்த நயமொழியால் ஆடவரை மயக்கியீர்க்கும் மகளிரை, “எத்தி யழைக்கும் கருங்கண்ணார்” என்று இயம்புகின்றார். கருங்கண்ணார் - மை தீட்டிய கண்களையுடைய மங்கையர். வெடிப்புத் தோன்றிய நிலத்தில் இயங்குபவர் தத்தி வீழ்தல் போல, மகளிர் முயக்கத்தில் வீழ்ந்தமை புலப்பட, “இடைக்குள் பிளந்த வெடிப்பதனில் தத்தி விழுந்தேன்” என்றும், எழுந்து நின்று நீங்கிச் செல்லலாமெனில், செல்லவிடாது மனம் மீளவும் அவ்வெடிப்பில் தள்ளுகிற தென்பார், “எழுவேனேல் தள்ளா நின்றதென் மனமே” என்றும் கூறுகின்றார்.

     இதனால், மனம் மீள மீளக் காமவின்பத்தில் தள்ளுதலால், பத்தியாகிய முதலின்றிப் பரமசுகம் பெறலாகுமோ என ஐயுற்றவாறாம்.

     (7)