937.

     மனமே முன்னர் வழிகாட்டப்
          பின்னே சென்று மங்கையர்தம்
     தனமே என்னும் மலைஏறிப்
          பார்த்தேன் இருண்ட சலதிஒன்று
     முனமே தோன்ற மதிமயங்கி
          விழுந்தேன் எழுவான் முயலுகின்றேன்
     இனமே என்னை நீஅன்றி
          எடுப்பார் இல்லை என்அரசே.

உரை:

     என்னுடைய வேந்தே, என் மனம் முன்பு சென்று வழிகாட்ட, யான் பின்னே சென்று மகளிருடைய முலையென்னும் மலைமேல் ஏறிக் கீழே நோக்கினபோது இருண்ட கடலொன்று முன்னே தோன்றக் கண்டு மதி கலங்கி அதன்கண் வீழ்ந்தொழிந்து எழுந்து கரையடைதற்கு முயல்கின்றேனாகலின், எனக்கு இனமாகிய நீயன்றி என்னை எடுத்து உய்விப்பார் ஒருவரும் இல்லை காண். எ.று.

     கண்ணும் ஒளியுமாகிய பொறி புலன்களின் ஆசை வழிச்செல்லும் மனம் மகளிரின் உருநலங்களைக் கண்டு அவர்பால் ஓடுவது கொண்டு “மனம் முன்னர் வழி காட்ட” என்றும், அதனைச் செல்லவிடாது நிறுத்தும் வலியில்லாமையால் அறிவுருவாய யான் பின்னே சென்றேன் என்பார், “பின்னே சென்று” என்றும், காணப்பட்ட மகளிரின் முலையிரண்டும் முற்படக் காட்சி தந்தமையின் அவற்றின்மேல் இவர்ந்தேன் என்பார், “மங்கையர்தம் தனம் என்னும் மலைமேல் ஏறி” என்றும், மலைமேல் ஏறினவன் கீழே தோன்றும் நிலத்தைக் காண்பதுபோல் கீழே நோக்கினேன் என்பார், “பார்த்தேன்” என்றும், பார்த்த எனக்குக் கரிய நிதம்பம் தோன்றக்கண்டு மதி மருண்டு அதன்கண் வீழ்ந்தேன் என்பார், “இருண்ட சலதி யொன்று முனம் தோன்ற மதிமயங்கி வீழ்ந்தேன்” என்றும், வீழ்ந்தவர் எழுந்து கரையேறி நீங்க முயல்வது போல் யானும் விலகி நீங்க விழைகின்றேன் என்பாராய், “எழுவான் முயலுகின்றேன்” என்றும் உரைக்கின்றார். உயிர் போலப் பரம்பொருளாகிய சிவனும் அறிவுருவினனாதல் பற்றி, “இனமே” எனவும், இனமாகிய யான் கெடுவது பொறாது எடுத்தருளற்கு ஒரு தனித்துணை நீ யல்லதில்லை என்பாராய், “என்னை தீயன்றி எடுப்பார் இல்லை” எனவும் கூறுகின்றார்.

     இதனால், எனக்கு இனமாய்த் துணையாய் அருளவல்ல பொருள் நீ யல்லதில்லை என்று முறையிட்டவாறாம்.

     (8)