938.

     என்னைக் கொடுத்தேன் பெண்பேய்கட்
          கின்பம் எனவே எனக்கவர்நோய்
     தன்னைக் கொடுத்தார் நான்அந்தோ
          தளர்ந்து நின்றேன் அல்லதுசெம்
     பொன்னைக் கொடுத்தும் பெறஅரிய
          பொருளே உன்னைப் போற்றுகிலேன்
     இன்னல் கொடுத்த பவமுடையேன்
          எற்றுக் கிவண்நிற் கின்றேனே.

உரை:

     செம்பொன்னைக் கொடுத்தாலும் பெறுதற்கரிய சிவபரம் பொருளே, பெண்களாகிய பேய்கட்கு என்னைக் கொடுத்தேனாக, இன்பம் என்று கருதி எனக்கு அவர்கள் நோய் கொடுத்தார்கள்; அதனால் நான் உள்ளமும் உடலும் தளர்வுற்றேனே யன்றி, உன்னைப் போற்றுதல் செய்யாதொழிந்தேன்; துன்பத்தைத் தருகின்ற பிறப்புடையேனாகிய யான், இவ்வுலகில் எதற்காக இருக்கின்றேன்? எ.று.

     பொன்னும் பொருளும் பிறர்க்களிக்கும் பெருமானாதலின், சிவனைப் “பொன்னைக் கொடுத்தும் பெறற்கரிய பொருள்” என்று புகழ்கின்றார். பெண்கட்கும் பெறற்குரிய பொருளாதலால், எனது உடலை அவர்கட்குக் கொடுத்தேன் என்பார், “என்னைக் கொடுத்தேன் பெண் பேய்கட்கு” எனவும், அதற்குக் கைம்மாறாக இன்பம் என்ற பெயரால் நோய் தந்தார்கள் என்பார், “இன்பம் எனவே எனக்கு அவர் நோய்தன்னைக் கொடுத்தார்” எனவும், அதனால் நான் உள்ளம் சிதைந்து உடல் தளர்ந்து இளைத்தேன் என்பாராய், “நான் தளர்ந்து நின்றேன்” எனவும் எடுத்துரைக்கின்றார். இச் செய்கைகளால் செயத்தக்கதாகிய நின்னைப் போற்றிப் பணிபுரியும் நற்செயலைச் செய்யாதொழிந்தேன் என்று இரங்கலுற்று, “உன்னைப் போற்றுகிலேன்” என்றும், இதனால் என் பிறப்புத் துன்பத்துக்கே இடமாயிற் றென்பார், “இன்னல் கொடுத்த பவமுடையேன்” என்றும், இனி நான் இவ்வுலகில் இருப்பதால் பயனில்லை என்பாராய், “எற்றுக்கு இவண் நிற்கின்றேன்” என்றும் இயம்புகின்றார். இவ்வுலகில் இருப்பது இனிப் பிறப்புக்கு இடமின்றாகிய பேரின்பப் பெருவாழ்வு நோக்கியதாகவும், யான் அதனை யெண்ணாது துன்பம் கொண்ட பிறப்புக்கள் மேலும் எய்தும் ஏதுவுடையனாயினேன் என்றும், என் பிறவி நோக்கம் சிதைந்தமையின் இனி இவ்வுலகில் இருப்பது வீண் என்றும் உரைப்பாராய் “இன்னல் கொடுத்த பவமுடையேன் எற்றுக்கு இவண் நிற்கின்றேன்” என உள்ளம் உடைந்து புலம்புகின்றார்.

     இதனால், பெண்டிர் கூட்டத்தால் சிவனைப் போற்றுதல் ஒழிந்து பிறவிப் பயனை வீணாக்கிக் கொண்டது கூறி வருந்தியவாறாம்.

     (9)