939. எற்றுக் கடியர் நின்றதுநின்
இணைத்தாள் மலரை ஏத்தஅன்றோ
மற்றிக் கொடியேன் அஃதின்றி
மடவார் இடைவாய் மணிப்பாம்பின்
புற்றுக் குழன்றேன் என்னேஎன்
புந்தி எவர்க்குப் புகல்வேனே
கற்றுத் தெளிந்தோர் புகழ்ஒற்றிக்
கண்ணார்ந் தோங்கும் கற்பகமே.
உரை: கற்பன கற்றுத் தெளிந்த அறிஞர் புகழும் திருவொற்றியூர்க்கண் நிறைந்தோங்கும் கற்பகம் போல்பவனே, நினக்கு அடியராயினார் இவ்வுலகில் நின்று வாழ்வது எதற்காக? நின்னுடைய இரண்டாகிய திருவடித் தாமரை மலர்களை ஏத்துதற்காகவன்றோ? இந்தக் கொடியவனாகிய யான் அது செய்யாது மகளிர் இடையின்கண் உள்ள நிதம்பமாகிய மணிப் பாம்பின் புற்றுக்கு ஆசையுற்று வருந்தினேன்; என் அறிவை என்னென்பது? இதனை எவர்க்குச் சொல்லுவேன்? எ.று.
திருஞான சம்பந்தர் முதல் பட்டினத்தடிகள் ஈறாகச் சிவஞானச் செல்வர் பலரும் திருவொற்றியூரைப் புகழ்ந்திருத்தலால், அச் சிறப்பு விளங்க, “கற்றுத் தெளிந்தோர் புகழ் ஒற்றி” என்று பாராட்டுகின்றார். வேண்டிற்று நல்கும் கற்பகம் போல, வேண்டுவார் வேண்டுவன வெல்லாம் வழங்கும் ஒற்றியூர்த் தியாகப்பெருமானை “ஒற்றிக் கண்ணார்ந்தோங்கும் கற்பகமே” என்று புகழ்கின்றார். அடியராயினார் இறைவன் திருவடி ஞானத்தால் ஞான வடிவெய்தி அவன் திருவடி நீழற்கண் பெறலாகும் சிவானந்த வாழ்வை உடனே பெறாமல் மண்ணுலகில் பன்னாள் நின்று வாழ்ந்தது திருவடி பணிந்தேத்தும் திருநின்ற செம்மை கருதி யென்பார், “எற்றுக்கு அடியர் நின்றது இணைத் தாண்மலரை ஏத்தவன்றோ” என்று அறிவுறுத்துகின்றார். அதனைத் தான் செய்யாத கொடுமை புலப்பட “மற்று இக் கொடியேன்” என்று சுட்டிக் கூறுகிறார். கொடுமையின்னது எனத் தெரிவித்தற்கு “மடவார் இடைவாய் மணிப் பாம்பின் புற்றுக்கு உழன்றேன்” என்கின்றார். மணிப் பாம்பு - தலையிலே மணியை யுடைய படம் விரியும் பாம்பு. பாம்புறையும் இடம் புற்று. இறைவன் இணை மலர்த்தாளை எண்ணாமல், மகளிர் இடைவாய்ப் பாம்பின் புற்றை யெண்ணி யுழன்றதற்கு ஏதுவாயிருந்தமையின், அறிவை வெறுத்து, “என்னே என் புந்தி” எனவும், இதனை யாவர் கேட்பினும் எள்ளியிகழ்வராதலால், “எவர்க்குப் புகல்வேன்” எனவும் தன்னையே ஏசிக்கொள்கின்றார்.
இதனால், அடியராயினார் செயல் நோக்காமல் பெண்ணின்பம் பேணிய திறம் நினைந்து வருந்தியவாறாம். (10)
|