940. ஓங்கும் பொருளே திருஒற்றி
யூர்வாழ் அரசே உனைத்துதியேன்
தீங்கும் புழுவும் சிலைநீரும்
சீழும் வழும்பும் சேர்ந்தலைக்கத
தூங்கும் மடவார் புலைநாற்றத்
தூம்பில் நுழையும் சூதகனேன்
வாங்கும் பவம்தீர்த் தருள்வதுநின்
கடன்காண் இந்த மண்ணிடத்தே.
உரை: ஓங்கிய சிவபரம் பொருளே, திருவொற்றியூர்க்கண் எழுந்தருளும் அருளரசே, உன்னைத் துதிக்காமல் தீங்கும் புழுவும் சிலை நீரும் சீழும் வழும்பும் சேர்ந்து வருத்துவதால் அசைந்து நடக்கும் மகளிருடைய புலால் நாறும் நிதம்பத்தில் புகும் சூதகனாகிய என்னை வளைத்துக் கொண்டிருக்கும் பிறவிப் பிணிப்பை தீர்த்து ஆட்கொள்வது இம் மண்ணுலகில் நினக்குக் கடன், காண். எ.று.
உயர் பொருள் அனைத்துக்கும் மேலாய் ஓங்கி விளங்கும் பரம்பொருள் சிவனாதலின், அவனை, “ஓங்கும் பொருள்” என்று பரவுகின்றார். துதித்தொழுக வேண்டிய யான் அது செய்யா தொழிந்ததேன் என்பார். “துதியேன்” என்கின்றார். இது முற்றெச்சம். சிலைநீர் - சிலைச் சோணி தம் என்னும் நீர்; இது வரையறையில்லாத காமப் புணர்ச்சியால் மகளிர்க்குண்டாகும் நோய். வழும்பு - வெள்ளைக் கசிவு. இவை பலவும் ஒருங்கு தோன்றி வருத்துமிடத்து மகளிரிடத்து மேனியில் மெலிவும் நடையில் தளர்ச்சியும் தோன்றுதலால், “சேர்ந் தலைக்கத் தூங்கும் மடவார்” என்று சொல்லுகின்றார். புலால் நாறுதல் பற்றி மகளிர் கடிதடத்தைப் “புலை நாற்றத் தூம்பு” என்று பழிக்கின்றார். சூதகன் - சூதக வெட்டை என்னும் நோய் கொண்டவன். இது வரைவில் காமப்புணர்ச்சியால் ஆடவர்க் குண்டாகும் நோய். இன்னோரன்ன நோய் வகைகளால் பிறவிப் பிணி நீங்கா வகையில் உயிரைப் பிணித்துக்கொள்வது தோன்ற “வாங்கும் பவம்” என உரைக்கின்றார். வாங்குதல் - வளைத்துக் கொளல். பவம் - பிறப்பு. பவப் பிணியை இறைவன் திருவருளல்லது போக்கும் வலியுடையது பிறிதில்லாமையால், மலப் பிணிப்பால் அறிவுக் கண்ணிருண்டு உலகியல் வாழ்வெய்தி உடம்பின் தொடக்குற்று வருந்தும் உயிர்க்கு உய்தி நல்கும் அருளாளனாதல் பற்றி, “பவம் தீர்த்து ஆள்வது நின் கடன் காண் இந்த மண்ணிடத்தே” என இயம்புகின்றார். மண்ணக வாழ்வு என்ற தொடர், சைவநூற் கொள்கைவழி நோக்குமிடத்து, ஆன்மாவைப் பற்றியிருக்கும் மலத்தைக் கழுவவுதவும் வாழ்வு எனப் பொருள்படும் என அறிக.
இதனால், உன்னைத் துதியாமல் மடவாரிடைப் புகுந்த சூதகனாகிய என் பிறவிப் பிணியைத் தீர்த்தாள்வது முதல்வன் நின் கடன் என முறையிட்டவாறாம். (11)
|