35. ஆனா வாழ்வின் அலைசல்

திருவொற்றியூர்

    ஆனா வாழ்வின் அலைசல் என்பது திருவருள் நெறிக்கண் அமையா தொழிந்த மையல் வாழ்வின்பொருட்டு மனம் வருந்தி இறைவன் திருவருளைத் தெளிந்து அதனைப் பெற வேண்டுவது. பத்தி நெறியைக் கைக்கொள்ளாது காம மடந்தையர் செலுத்தும் சிற்றின்ப நெறியில் இயலுவதும், அங்ஙனம் இயலுங்கால் ஊரவர் கண்டு எள்ளி நகைக்கத் திரிந்து உய்தி காணாது உலமருவதும், சிற்றின்ப நுகர்வே வாழ்வென் றெண்ணி வருந்தினமையும் கூறி, உய்தி நல்குவது திருவருள்; அவ்வருட் பேற்றாலன்றித் தெருட்சியுற்று மெய்யின்புற வழியில்லை; ஆதலால் அருள் ஞானம் நல்குக எனவும், அதனை நல்குமிடத்துச் சோதனை செய்தல் வேண்டா எனவும், இப் பத்தின்கண் வள்ளற்பெருமான் உலகவர் சார்பாக வேண்டுகின்றார். ஆனா வாழ்வில் அல்லலுறுவோர் ஆயுங்கால் அடியவராதல் கண்டு கைவிடாமல் பிழைபொறுத்தருள்வது கடன் என இறைஞ்சுகின்றார். மேலும் திருவருள் ஞானம் எய்தப் பெற்றோர் உலகியற் சிற்றின்ப வெறிக்கு இரையாகார் என்பது காட்டப்படுகிறது.

    இக் கருத்துக்களை யுள்ளுறையாகக் கொண்ட இப் பாட்டுக்கள் பத்தும் அந்தாதித் தொடையில் அமைந்து மனப்பாடம் செய்தற்கு எளிமை தருகின்றன.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

941.

     துள்ளிவாய் மடுக்கும் காளையர் ஆட்டத்
          துடுக்கினை ஒடுக்குறும் காமக்
     கொள்ளிவாய்ப் பேய்கள் எனுமட வியர்தம்
          கூட்டத்துள் நாட்டம்வைத் துழன்றேன்
     உள்ளிவாய் மடுத்துள் உருகிஆ னந்த
          உததிபோல் கண்கள்நீர் உகுப்பார்
     அள்ளிவாய் மடுக்கும் அமுதே எங்கள்
          அண்ணலே ஒற்றியூர் அரசே.

உரை:

     மனத்தினுள் சிந்தித்து ஊறும் செந்தேனை நிறையவுண்டு நெஞ்சம் உருகி ஆனந்தக் கடல் போன்ற கண்ணீரைச் சொரிகின்ற மெய்யடியார்கள் எடுத்து வாயிற் பெய்துண்ணும் ஞானமாகிய அமுதமானவனே, எங்கட்குத் தலைவனே, திருவொற்றியூரில் எழுந்தருளும் வேந்தே, நுகர் பொருளைத் துள்ளி யெடுத்துண்ணும் காளைப் பருவத்து ஆடவரின் ஆட்டத்தில் தோன்றும் துடுக்குச் செய்கைகளை ஒடுக்கி மறையச்செய்யும் காமமடந்தையர் என்னும் கொள்ளிவாய்ப் பேய்களின் கூட்டத்தில் ஆர்வமுற்று அலைந்தேன்; ஈது என் அறத்தில் ஆனாத வாழ்வு காண். எ.று.

     சிவபரம்பொருளின் திருவடியைச் சிந்திப்பார்க்குச் செந்தேன் பெருகிச் சிந்தைக்கண் நிறைதலால் அதனை ஆரவுண்டு தேக்கெறியும் பெருமக்கள் பெருகிய பேரின்பத்தால் கண்களில் கடல்போல் நீர் சொரிவர் என விளக்குவாராய், “உள்ளி வாய் மடுத்து உள்ளுருகி ஆனந்த உததி போல் கண்கள் நீர் உகுப்பார்” எனவுரைக்கின்றார். உததி - கடல். சிந்திப்பவர் உள்ளத்தே செந்தேன் ஊறுமென்பதைத் திருநாவுக்கரசர், “சிந்திப்பவர்க்குச் சிறந்து செந்தேன் முந்திப் பொழிவன” (ஐயாறு) என அறிக. மெய்யன்பர்களின் மெய்யுணர்வில் காட்சி தந்து இன்புறுத்துவது பற்றி, “அள்ளிவாய் மடுக்கும் அமுதமே” என்றும், உயிர் வகை யனைத்துக்கும் தலைவனாதலின் சிவனை, “எங்கள் அண்ணலே” என்றும் இயம்புகின்றார். வாய் மடுத்தல் என்னும் தொடர், ஆர நுகர்தல் என்ற பொருள்பட வந்தது. காளைப்பருவத்தில் ஆடவர் நடையும் செயலும் துள்ளும் இயல்பினவாதலால், “துள்ளிவாய் மடுக்கும் காளையர்” என்று குறிக்கின்றார். காளைப் பருவத்தைத் “துள்ளித் திரிகின்ற காலம்” என்பதும் வழக்கம். அச்சமும் ஆராய்ச்சியும் இன்றிச் செய்வது துடுக்கு. ஓரொருகால் விரைவும் துணிச்சலும் துடுக்கில் கலந்துகொள்ளும். ஆட்டும் பாட்டும் காளைப் பருவத்தார்க்கு இயல்பாய் அமைதலால், “காளையர் ஆட்டத் துடுக்கு” என்கிறார். அத் துடுக்கு மகளிர் கூட்டத்தால் குன்றுவதுபற்றித் “துடுக்கினை ஒடுக்குறும் காம மடவியர்” என்கின்றார். மடவார் - மடவியர் என வந்தது. “மடவியன் இவனென நாணக் காட்டும் தனித் தொழில் புரிந்தேம்” (பெருங். 3. 15. 14-5) என வருதல் காண்க. காம மடவியர், கொள்ளிவாய்ப் பேய்கள் எனும் மடவியர் என இயையும். காம மடந்தையரைக் “காமகமனி” என வட நூலார் கூறுவர்; காமக் கூட்டமே விரும்பும் மகளிர். கொள்ளிவாய்ப் பேய், பேய்வகையுள் ஒன்று, “சுழலும் அழல்விழிக் கொள்ளிவாய்ப் பேய்” (மூத்த) என்று காரைக்காலம்மையார் கூறுவர். நாட்டம் ஈண்டு ஆர்வம் காரணமாக வந்தது.

     இதனால், பத்தி நெறிக்கு அமையாத காம மடவியர் நெறிக்கண் உழன்ற திறம் கூறி வருந்தியவாறாம்.

     (1)